சும்மா, மாத்தி மாத்தி பேசுறாங்க.. என்னுடைய கேள்வியே இதேதான் ; கொதித்தெழுந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்..!!
Author: Babu Lakshmanan10 மே 2023, 7:57 மணி
திருப்பதி : மாநில ஆளுநர் என்ற முறையில் எனக்கு புதிய சட்டமன்ற வளாகம் திறப்பு விழா, அம்பேத்கர் சிலை திறப்பு விழா ஆகியவற்றிற்கு அழைப்பிதழ் அனுப்பி இருக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவருக்கு வேதஆசி வழங்கினர்.
பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர், நாடு நலம்பெற்று பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக வாழ வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டி கொண்டேன். இறைவன் அருளால் கொரோனா பாதிப்பில் இருந்து நாம் மீண்டு இருக்கிறோம் என்று கூறினார்.
சமீபத்தில் தெலுங்கானாவில் நாட்டிலேயே மிக உயரமான அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டது. மேலும், தெலுங்கானா மாநில புதிய சட்டமன்ற வளாக திறப்பு விழாவும் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் மாநில அரசு சார்பில் ஆளுநருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. எனவே அவரும் கலந்து கொள்ளவில்லை.
இது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், மாநில ஆளுநர் என்ற முறையில் எனக்கு இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அமைச்சர்கள் இந்த விஷயத்தில் மாற்றி பேசுகின்றனர். என்னுடைய கேள்வியும் இதேதான். ஆளுநராகிய எனக்கு ஏன் அழைப்பு அனுப்பப்படவில்லை என்பதே என்னுடைய கேள்வி என்று அப்போது கூறினார்.
1
0