ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டம்: ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து…!!

25 October 2020, 9:08 am
Quick Share

தமிழக மக்களுக்கு ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளான இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும், நாளை விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தீய சக்திகளை அழிக்கும் நல்ல சக்திகளின் வெற்றியை குறிக்கும் ஆயுதபூஜை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சிறப்பு மிக்க ஆயுதபூஜை, விஜயதசமி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள்அனைவரும், எல்லா நலன்களும், வளங்களும் பெற்று, வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது, நவராத்திரி பண்டிகையின் 9,10வது நாளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்தி எனது உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளில் ஆயுதபூஜையையும், 10வது நாளில் விஜயதசமியையும் பக்தியுடன் கொண்டாடி மகிழும் அன்புக்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இனி வரும் காலங்களில் மாணவர்கள் கல்வியிலும், தொழிலாளர்கள், தொழில் துறையினர் தங்கள் தொழில்களிலும் சிறந்து விளங்கி சாதனை படைக்க வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

சமக தலைவர் சரத்குமார் கூறுகையில், ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி, கல்விக்கும், தொழிலுக்கும், செல்வத்துக்கும் உரிய தெய்வங்களை வணங்கி, எல்லா வளமும், நலமும் பெற்று வாழ வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

Views: - 25

0

0