40 நாள் என் கூடதான் இருந்தாரு.. அவர் எனக்கு அண்ணன் மாதிரி : மறைந்த மயில்சாமி குறித்து உருகிய அமைச்சர் உதயநிதி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2023, 3:53 pm
Udhayanithi - Updatenews360
Quick Share

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று இரவு முழுவதும் சிவராத்திரி விழாவில் பாட்டு பாடி இறை வழிபாடு நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

சென்னை, வடபழனியில் உள்ள மயில்சாமியின் வீட்டில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர், தயாரிப்பாளர், விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் மயில்சாமியின் மறைவை அறிந்து மிகவும் வேதனைப்பட்ட நிலையில், நேரில் சென்று அவரது திருவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் மயில்சாமி உடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மயில்சாமி எனக்கு ஒரு அண்ணன் மாதிரியே இருந்தார். எப்போதும் சிரித்த முகத்துடனே பேசுவார். அவரது மறைவு செய்தி அறிந்ததுமே ரொம்ப அதிர்ச்சியாகிட்டேன். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு நிச்சயமாக பேரிழப்பு தான் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் போலீஸ் அதிகாரியாக மயில்சாமி நடித்திருப்பார். மொத்தம் 50 நாட்கள் அந்த படம் எடுக்கப்பட்டது. அதில், 40 நாட்கள் என்னுடனே அவர் டிராவல் செய்தார். அவருடைய நல்ல மனசை பலரும் பாராட்டி உள்ளனர் என நெஞ்சுக்கு நீதி படத்தில் மயில்சாமி உடன் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

பல கோடி ரசிகர்களை தனது நகைச்சுவை திறனால் சிரிக்க வைத்து வந்த மயில்சாமி ஏகப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற பண உதவிகளையும் செய்துள்ளார். மயில்சாமியின் வீட்டுக்கு அருகே உள்ள பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் கண்ணீர் மல்க மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என தொடர்ந்து மயில்சாமியின் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Views: - 258

0

0