தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்: உங்க மாவட்டத்துல என்ன நிலவரம் தெரிஞ்சுக்கோங்க!!

Author: Aarthi Sivakumar
25 September 2021, 8:50 am
Quick Share

சென்னை: மத்திய வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது.

இதன் காரணமாக கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் அதிகபட்சமாக திருப்பூரில் 18 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

அதன் தொடர்ச்சியாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Views: - 126

0

0