வெள்ளத்தில் தத்தளிக்கும் நீலகிரி.. தலைகாட்டாத எம்.பி., ஆ.ராசா..! அதிருப்தியில் மக்கள்!!

10 August 2020, 2:29 pm
a - raja 1- updatenews360
Quick Share

மலை மாவட்டமான நீலகிரி, மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கொரோனாவை எதிர்த்து போராடி வரும் நிலையில், இயற்கையும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டை போலவே அதீத கனமழை பெய்து மாவட்டத்தை பெரிதும் ஸ்தம்பிக்க வைத்து விட்டது. இதுவரையில் கனமழை மற்றும் அது தொடர்பான விபத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மலை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிந்தோடுவதால், அதன் அருகாமையில் உள்ள குடியிருப்புகள் முற்றிலும் சேதமடைந்தன. மேலும், சாலைகளில் பெருக்கெடுத்தோடிய வெள்ள நீர், மண்சரிவு, மரங்கள் சாய்ந்து விழுந்து விபத்து போன்றவற்றின் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. குறிப்பாக, உதகை – கூடலூர் சாலை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

ஏற்கனவே, கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மலை கிராம மக்கள், இந்த தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவுகளினால் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள், அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு நிவாரண உதவிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா, வெள்ளம் என அடுத்தடுத்து பேரிடர்களை சந்தித்து வரும் நீலகிரிக்கு, அந்த தொகுதியின் எம்.பி.யான ஆ.ராசா தலைகூட காட்டாமல் இருப்பது அம்மாவட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்பார்வையிட்டு, கண்காணித்து வரும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட, கொட்டும் கனமழையிலும் நீலகிரி மாவட்டத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு முடுக்கி விட்டதுடன், நிவாரண உதவிகளையும் வழங்கினர்.

ஆனால், சொந்த தொகுதி மக்கள் இப்படி, கொரோனாவிலும், வெள்ளத்திலும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருவதை, நீலகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ- ஆ.ராசா நேரில் வந்து கூட காணாமல் இருப்பது அம்மாவட்ட மக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. இந்த பேரிடர் சூழலில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிகளுக்கு சென்று வர எந்தவிதமான தடையும் இல்லாத நிலையில், அவர் நீலகிரிக்கு தலை காட்டாதது வாக்களித்த மக்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டு போயுள்ளது.

a - raja - updatenews360

அதுமட்டுமில்லாமல், நீலகிரியில் இன்னும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், சொந்த தொகுதியின் பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பற்றியும் ஆ.ராசா ஒரு அறிக்கை கூட விடாதது பெரும் ஏமாற்றை அளித்துள்ளது.

“சொந்த தொகுதியில் இவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட்டுள்ள பொழுது, கண்டும் காணாததை போல எம்.பி. ஆ.ராசா இருப்பது வேதனை அளிக்கிறது,” என்று நீலகிரி தொகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எதோ ஒரு ஊரை பூர்விகமாக கொண்டவரை நீலகிரிக்கு எம்.பி.யாக தேர்வு செய்தால் இப்படித்தான் இருக்கும் என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

நீலகிரி மக்களின் இந்த எதிர்பார்ப்பிற்கு பிறகாவது, எம்.பி., ஆ. ராசா தனது தொகுதியில் ஆய்வு மேற்கொள்வார் என எதிர்பார்ப்பதாக மாவட்ட அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 46

0

0