சினிமாவுக்கு நோ… இனிமேல் முழுநேரம் அரசியல்வாதி தான்… என்னுடைய செயல்பாடுகள் மூலம் பதிலடி ; அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தடாலடி!!

Author: Babu Lakshmanan
14 December 2022, 10:50 am
Quick Share

திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முடிவு செய்து, தேதி மற்றும் நேரம் என அனைத்தும் தீர்மானிக்கப்பட்டு, இதற்கான பரிந்துரை ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப் பரிந்துரையை ஆளுநரும் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பும் செய்து வைத்தார். பின்னர், ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களோடு கூட்டாக புகைப்படம் எடுத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அமைச்சராக பதவியேற்ற அவருக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அனைவரின் ஒத்துழைப்போடு சிறப்பான முறையில் பணியாற்றுவேன். வாரிசு அரசியல் என சொல்பவர்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் கொடுப்பேன்.

அரசியலில் முழு கவனம் செலுத்தப் போகிறேன். இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் மாமன்னன் படமே எனது கடைசி படமாகும். கமல் தயாரிப்பில் , நான் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டது, எனக் கூறினார்.

Views: - 411

0

0