நீட் தேர்வு…உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை எடுக்க முடியாது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் குட்டு..!!

Author: Aarthi Sivakumar
29 June 2021, 1:00 pm
Chennai High Court- Updatenews360
Quick Share

சென்னை: நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்ததை எதிர்த்த வழக்கு தொடர்பாக, மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக சமீபத்தில் பிரதமரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் நீட் தேர்வு தொடர்பான தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

neet - updatenews360

இந்த குழுவிடம் பொதுமக்கள் நீட் தேர்வு குறித்த கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதனை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இது அனுமதிக்கத்தக்கது அல்ல. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது.

NEET_2021_UpdateNews360

உச்சநீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும் தேசிய நலனின் அடிப்படையிலும் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது. ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க ஏதுவாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானரர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வி.ராகவாச்சாரி, நீட் தேர்வு நடைமுறையை புறந்தள்ளும் வகையில் தமிழக அரசு குழு அமைத்திருப்பதாக குற்றஞ்சாட்டினார். அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம், தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை எடுக்க முடியாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறியும் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? என கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக அரசின் விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Views: - 223

0

0