இந்திக்கு ஆதரவாக விஜய பிரபாகரன்! நீட்டுக்கு எதிர்ப்பாக எல்.கே.சுதீஷ்! கூட்டணிக் குழப்பத்தில் தேமுதிக!

16 September 2020, 7:11 pm
dmdk -- updatenews360
Quick Share

சென்னை: அதிமுக-பாஜக கூட்டணியில் 2019 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்த நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, ஒவ்வொரு பிரச்சினையிலும் தமது நிலைப்பாட்டை மாற்றிமாற்றிப் பேசிவருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்துப் பிரச்சினைகளிலும் பாஜகவுக்கு ஆதரவாகப் பேசி, அதிமுக எதிர்ப்பு நிலையை எடுத்து, கூட்டணியில் அதிக இடங்களைப் பெறலாம் என்று இதுவரை செயல்பட்டு வந்த தேமுதிக, நீட் தேர்வு குறித்த தனது நிலைப்பாட்டை இப்போது மாற்றிக்கொண்டுள்ளது.

2014 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி பாஜகவின் அரசியல் கூட்டணியில் இருக்கும் தேமுதிக எல்லாப் பிரச்சினைகளிலும் பாஜகவின் கருத்தை ஆதரித்துக் கருத்துகளைக் கூறிவந்தது. மும்மொழிக் கொள்கையையும் புதிய கல்விக் கொள்கையையும் நீட் தேர்வையும் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆதரித்துப் பேசிவந்தார். பாஜகவுடன் வலுவாக அரசியல் உறவை நீடித்து அதிமுக கூட்டணியில் அதிக இடங்களைப் பெற தேமுதிக திட்டமிட்டிருந்தது.

ஆனால், நீட் பிரச்சினையில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சூழலில் தேமுதிக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. நீட் தேர்வை அதிமுகவும் பாமகவும் தீவிரமாக எதிர்த்து வருகின்றன. அதிமுகவே மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது என்பதை தாமதமாக உணர்ந்து கொண்ட தேமுதிக தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளது. நேற்று, பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் இதுநாள் வரை நீட்டை ஆதரித்து வந்தது உண்மைதான் என்றும் இப்போது கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

sudhish -dmk - updatenews360

தேசிய அளவில் ஒரு நுழைவுத்தேர்வு நடத்துவது தவறு இல்லை என்றாலும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி அமைப்பைக் கொண்டுவந்த பிறகுதான் தேசிய அளவு நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்றார் சுதீஷ். அதுவரை நீட் தேர்வைத் தள்ளிவைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், அதேநேரத்தில் பேட்டியளித்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், மும்மொழிக் கொள்கையை ஆதரித்துப் பேசினார். ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்பது கேப்டனின் முழக்கம். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 100% வேலை வாய்ப்பை தந்திருந்தால் தமிழர்கள் வெளியே சென்றிருக்க மாட்டார்கள். ‘இந்தி தெரியாது போடா’ என்று பலரும் தவறாக பேசி வருகிறார்கள். அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம் என்பது கேப்டனின் இலக்கு என்று அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து ‘அனைத்து மொழிகளும் கற்பது இருக்கட்டும். இருமொழிகளின் ஒன்றான ஆங்கிலத்தில் முதலில் பேட்டி கொடுங்கள்’ என்று அவரைப் பலரும் கலாய்த்து வருகின்றனர். கூட்டணி அமைப்பதில் கட்சியில் இருக்கும் குழப்பமே கட்சியின் நிலைப்பாடுகளில் எதிரொலிப்பதாகக் கருதப்படுகிறது.

Views: - 0

0

0