இது தேவையில்லாத வேலை…. திமுக வீட்டு விஷேசங்கள் எப்படி நடக்குது..? இந்து முறைப்படி பூஜைக்கு திமுக எம்பி எதிர்ப்பு ; பதிலடி கொடுத்த காங்கிரஸ்!!

Author: Babu Lakshmanan
17 July 2022, 11:26 am
Quick Share

தர்மபுரி அருகே நடந்த விழாவில் இந்து முறைப்படி நடந்த பூஜைக்கு திமுக எம்பி எதிர்ப்பு தெரிவித்ததற்கு, காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி தொடங்கியது. இதற்காக துறை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் பணியை துவங்க பூமி பூஜை ஏற்பாடு செய்தனர். அப்போது விழாவில் கலந்து கொண்ட தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கான ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

மேலும் அரசு விழா என்றால் இந்து சமுதாயத்தை மட்டுமன்றி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ பாதிரியார்களை மற்றும் கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து இது போன்ற பணியை துவங்க வேண்டும். இது திராவிட மாடல் அரசு பூஜையை நிறுத்திவிட்டு செந்தில்குமார் பணியை தொடங்கி வைத்தார். இது குறித்து திமுக எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையை சோதிக்கிறார்கள் என வீடியோவை அவரே வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பலரும் எம்பி செந்தில்குமாருக்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இதுகுறித்து பதிவிட்டுள்ள பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி,”ஓரு பாராளுமன்ற உறுப்பினரின் சிறுபிள்ளைத்தனமான செயல். பூஜை செய்வது என்பது பணியாற்றுபவர்களின் நம்பிக்கைகாக. அரசுக்காக அல்ல. பூஜையில் தி க வினர் எங்கே என்று கேட்பது வன்மத்தின் வெளிப்பாடு. ” என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதேபோல, தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரின் செயல்பாடு தேவையற்றது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “முற்றிலும் தேவையற்ற செயல். உண்மையை சொல்லுங்கள்.. இது போன்ற நிகழ்வுகள் இல்லாமல் உங்கள் கட்சி உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் திருமணம், புதுமனை புகுவிழா நடந்துள்ளதா? மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதால் அனைத்து வகையான சடங்குகளையும் மறுப்பதாக திராவிட தலைவர்கள் நினைக்கிறார்கள். ஒவ்வொரு பதவிப் பிரமாண நிகழ்ச்சியும் அல்லது பதவியேற்பு விழாவும் அரசாங்க நிகழ்வு தான். நீங்கள் நேரத்தை சொல்லுங்கள்.. அந்த நேரம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.” என கூறியுள்ளார். அதாவது நல்ல நேரம் பார்த்துதான் அரசு நிகழ்ச்சிகளோ, பதவியேற்பு நிகழ்ச்சிகளோ நடந்துள்ளது எனவும் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

Views: - 530

0

0