இந்து கோவில்களில் மோடி நிகழ்ச்சியா…? வீரமணியை அடக்கிய அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
15 November 2021, 2:01 pm
Annamalai - updatenews360
Quick Share

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஏதாவது ஒரு வம்பு, வழக்கில் சிக்க வைத்துவிடவேண்டும் என்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருவதாக கூறப்படுவதுண்டு. அது அரசியல் ஆர்வலர்கள் அனைவரும் அறிந்த விஷயம்.

நெற்றியடி பதில்

சில குறிப்பிட்ட தனியார் டிவி சேனல்கள் அவரை துரத்தி துரத்தி எப்படியாவது அவருடைய வாயிலிருந்து சர்ச்சைக்குரிய பதிலை வரவழைத்து அதை பூதாகரமாக்கவேண்டும் என்று மடக்கி மடக்கி கேள்விகளும் கேட்கின்றன. ஆனால் அவற்றுக்கு அண்ணாமலை நெற்றியடி பதில் கொடுப்பதால், தற்போது அந்த சேனல்கள் அவரிடம் கிடுக்குப்பிடி கேள்வி கேட்பதையே மூட்டை கட்டி வைத்து விட்டன என்று பாஜகவினர் கேலியாக கூறுகின்றனர்.

annamalai bjp - updatenews360

இந்த நிலையில்தான் அண்ணாமலை வசமாக சிக்கிக் கொண்டார் என்று ஒரு சிலர் பெருமிதம் கொள்வது போன்ற ஒரு நிகழ்வு அண்மையில் பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த 5-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை நிறுவி பல்வேறு நலத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார்.

கோவிலா..? கமலாலயமா?

இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட 16 கோவில்களில் பிரமாண்ட ஸ்கிரீன் வைத்து இந்நிகழ்ச்சியை பக்தர்கள் காண்பதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.

இதுதான் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. ஸ்ரீராமபானம் என்ற அமைப்பை நடத்தி வரும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் அண்ணாமலை மீது திடீரென ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட ஒரு வீடியோவில்,“அண்ணாமலை நவம்பர் 5-ம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்துள்ளார். பெருமாளை தரிசனம் செய்ய அவர் வந்திருந்தால் அதை செய்துவிட்டு அவர் சென்றிருக்க வேண்டும்.

ஆனால் கோவிலை இழிவுபடுத்தும் வகையில் கோவிலுக்குள் கட்சிக்காரர்களை அழைத்துக் கொண்டு வந்து நிகழ்ச்சியை பார்த்திருக்கிறார். இது கோவிலா அல்லது இவர்களது கமலாலயமா?
இதை கோவில் நிர்வாகம் அனுமதித்தது எப்படி?…

கட்சிக்காரர்களை வைத்துக் கொண்டு பிரதமர் சொல்லும் விஷயத்தை இங்கே கேட்பீர்கள் என்றால், நாளை வேறு ஒருவர் இங்கே வந்து இதேபோல கட்சி கூட்டத்தை கூட்டுவேன் என்று சொன்னால் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

இன்று தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது திமுக. சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறார். இப்படி இருக்கும்போது பாஜக கோவிலுக்குள் சென்று பெருமாளுடைய மண்டபத்தை இவர்களது கட்சி கூடாரமாக மாற்றி அங்கே ஒரு தமாஷை நடத்துவது சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் செயல். அண்ணாமலை இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என ஆவேசமாக கூறி இருந்தார்.

கொலை மிரட்டல்

அடுத்த இரண்டு நாட்களில் அவர் இன்னொரு வீடியோவையும் வெளியிட்டார். அதில், “பாஜகவினர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அதற்கு அண்ணாமலைதான் காரணம். இதை எனது வாக்குமூலமாகவே எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும் அதிர வைத்தார்.

நரசிம்மன் வெளியிட்ட இந்த இரண்டு வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு சில செய்தி சேனல்களும் நரசிம்மனின் வெளியிட்ட வீடியோ வீடியோக்களுக்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்து, தமிழக அரசியல் களத்தை சூடாக்கின.

இதுதொடர்பாக நரசிம்மன் ஸ்ரீரங்கம் போலீசிலும் புகார் செய்தார். போலீசாரும் அவருடைய புகாரை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டை கொடுத்தனர். இதனால் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ததாகவும் ஊடகங்களில் ஒரு தகவல் பரவியது.

வீரமணி கேள்வி

இந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இவ்விவகாரத்தை கையிலெடுத்தார். வழக்கம்போல தனக்கே உரிய பாணியில் சரமாரியாக பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார்.

அவர் கூறும்போது”, கோவில் மண்டபம் அல்லது வளாகத் திற்குள் இப்படி திரையிட்டு குறிப்பிட்ட கட்சியினர் பார்க்க அனுமதி உண்டா? அளித்தது யார்? என்பது குறித்து கவனிப்பது முக்கியம்.

Veeramani Condemned - Updatenews360

இது தொடர்ந்தால் கோவில்கள் ஆர்.எஸ்.எஸ். பரப்புரைத் தளங்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.
கோவில்களை அரசியலாக்குவது எந்த வகையில் சரி? இதற்குக் காரணமாக இருந்த இந்து அறநிலையத் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பிரதமர் உரையைத் தானே ஒளிபரப்பினார்கள் என்று சொல்லித் தப்பிக்க முடியாது. ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியோ ஆதி சங்கரர் மடத்தில் பிரதமர் மேற்கொண்ட பூஜை. இது அப்பட்டமாக இந்து மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி. இந்த வாய்ப்பு மற்றவர்களுக்கு அளிக்கப்படுமா? இதுவரை இல்லாத ஒன்றிற்குப் புதுவழி திறந்து விடப்பட்டிருக்கிறது என்று கருதலாமா?… கோவில்களைப் போராட்டக் களமாக மாறும் நிலையை இதன் மூலம் ஏற்படுத்தாதா? முளையிலேயே இதனைக் கிள்ளி எறியவேண்டும். இந்து அறநிலையத்துறை அமைச்சர் கவனித்துக் கொள்வார் என்றே எதிர்பார்க்கிறோம்”என்று குறிப்பிட்டார்.

இந்து அறநிலையத்துறை

இந்த நிலையில் அண்ணாமலையிடம், செய்தியாளர்கள், “ஸ்ரீரங்கம் கோவிலில் பாஜக அரசியல் கூட்டம் நடத்தியதாகவும் அதை எதிர்த்துக் கேட்டதற்காக தன்னை மிரட்டுவதாக நரசிம்மன் என்பவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறாரே?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை,“பிரதமர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியை நேரலையில் காண தமிழகத்தில் 16 கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கோவில்கள் எல்லாமே ஆதிசங்கரர் பூஜை செய்து வழிபட்டவை.

Annamalai - Updatenews360

ஸ்ரீரங்கம் கோவிலிலும் தமிழக இந்து சமய அறநிலையத்துறைதான் நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்திருந்தது. நான் அங்கே ஒரு சாதாரண பக்தனாக கலந்துகொண்டேன். இதில் எந்தத் தவறும் கிடையாது. இதில் என் மீது புகார் சொல்லும் தனி நபர்களை மதித்து நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இதேபோன்ற நிகழ்ச்சிகளை அரசு நடத்தினால் அதில் கலந்து கொள்வோம். இது தொடர்பாக நான் யாரையும் மிரட்டவில்லை. புகார் கொடுத்தவரை நான் பார்த்ததே இல்லை. அவரிடம் போனில் பேசியதும் கிடையாது. மெயிலிலும் தொடர்பு கொண்டதில்லை. பின்பு எப்படி அவரை நான் மிரட்டியிருக்க முடியும்?”என்று நெற்றியடியாக பதிலளித்தார்.

இதுபற்றி பாஜக நிர்வாகிகள் கூறும்போது, “அண்ணாமலையை ஏதாவது ஒரு விவகாரத்தில் சிக்க வைக்கவேண்டும் என்று சில ஊடகங்கள் ஒன்றுமில்லாத விஷயங்களை ஊதி பெரிதாக்குகின்றன. அவர் மீது அவதூறும் பரப்புகின்றன. எந்த ஒரு சப்ஜெக்ட்டிலும் அவரை மடக்குவது கடினமாக இருப்பதாலும், அவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாததாலும் இதுபோன்ற நெருக்கடியை கொடுக்கின்றன. வழக்கம்போல சில ஊடகங்கள் பூதாகரமாக்கிய இந்த விவகாரமும் கடைசியில் புஸ்வாணம் ஆகிப் போய்விட்டது.

எதற்கெடுத்தாலும் பாஜகவை வம்புக்கு இழுக்கும் வீரமணிக்கு அண்ணாமலை சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று கூறும் வீரமணியின் திராவிடர் கழகத்தினர், இந்து கோவில்கள் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை” என்றனர்.

Views: - 339

0

0