தமிழக அரசின் ரூ.1000 எப்படி பெறுவது..? எப்போது கிடைக்கும்..?

25 March 2020, 9:28 pm
Quick Share

சென்னை: கொரோனா பாதிப்பு எதிரொலியாக, தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.1000 எப்படி பெற வேண்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் முடக்கம் காரணமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான அன்றைய தினமே சமூக வலை தளங்களில் ரேஷன் கடைகளில் மக்கள் கட்டத்திற்கு நடுவே நின்று 1000 ரூபாய் பெற்று கொள்வது போன்று படங்கள் வெளியானது.

அதை கண்ட பலரும் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்க ஆரம்பித்தனர். இது ஒரு புறம் இருக்க, பிரதமர் மோடி, ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிப்பு செய்து அறிவித்தார்.

இதை தொடர்ந்து ரேஷன் கடைகளிலோ ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு பணம் தருவதாக மக்களிடம் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இந் நிலையில் அந்த 1000 ரூபாயை எப்படி பெறுவது என்ற விவரங்களை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: கொரோனாவால் ஏற்பட்ட முடக்கத்தை பொதுமக்களிடம் போக்கும் வண்ணம் தனித்தனியே இடைவெளி விட்டு நின்று பணமும், பொருளும் தர திட்டமிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு டோக்கன் தந்து பொருளும் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மார்ச் மாசம் பொருட்களை ரேசன் கடைகளில் வாங்காமல் இருந்தால் தற்போது வாங்கிக்கொள்ளலாம். அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் நியாய விலைக் கடை பொருட்கள் பெற விருப்பம் இல்லாதவர்கள் சிவில்சப்ளை இணையதளத்தில் அல்லது அதற்கான செயலியில், வாங்க விரும்பவில்லை என்று பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.