திமுகவிடம் 15 எம்பி சீட் வாங்கணும்! கறார் முடிவில் தமிழக காங்?!!

Author: Udayachandran RadhaKrishnan
17 November 2022, 9:29 pm
DM cong -Updatenews360
Quick Share

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தமிழகத்தில் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.

சூடு பிடிக்கும் மக்களவை தேர்தல்

ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இதற்கான ஆயத்த பணிகளில் முனைப்புடன் இறங்கியும் விட்டனர்.

மேலும் கடந்த வாரம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக அலுவலகமான கமலாலயம் சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாநில பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

காங்கிரஸ் ஆலோசனையில் அடிதடி!!

இந்த நிலையில்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை தமிழக காங்கிரசும் அண்மையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இரண்டு நாட்கள் நடத்தியது.

இதில் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முதல் நாள் கூட்டம் நடந்தபோதுதான், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்றக்கோரி அந்த மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காங்கிரசார், கே எஸ் அழகிரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதும், அப்போது நடந்த கைகலப்பில் கட்சியின் தொண்டர்கள் மூவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் தனிக்கதை.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கே எஸ் அழகிரி, 2024 தேர்தல் மற்றும் திமுக கூட்டணி குறித்து பரபரப்பாக பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவருடைய அந்த பேச்சு இதுதான் என்றும் கூறப்படுகிறது.

வெற்றிக்கு காரணம் ராகுல்

“2014 தேர்தலில் தமிழகத்தில் நமக்கு ஒரு எம்பி கூட கிடைக்கவில்லை. ஆனால், 2019-ல் திமுகவுடன் கூட்டணி அமைத்து, எட்டு எம்பிக்களை பெற்றோம். தற்போது எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பிரச்சினைகளால் வலுவிழந்து இருக்கிறது. அக்கட்சியால் வலுவான கூட்டணியை அமைக்க முடியுமா? என்பது சந்தேகம்தான். இன்றைய நிலையில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது அதனால்தான் பாமக,
தேமுதிக போன்ற கட்சிகளும் இந்த அணியில் சேர ஆர்வம் காட்டுகின்றன.

2019ல் நாடெங்கும் காங்கிரஸ் தோற்ற போதிலும் தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது. இதற்கு முக்கிய காரணம் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்தியதுதான்.

மேலும் கடந்த 2019ல் திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. இப்போது ஆளும் கட்சியாக இருக்கிறது. அதனால் மக்களிடம் எதிர்ப்பு உணர்வு உருவாகியிருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதிக தொகுதிகளை கேட்க காங்., முடிவு

2019-ல் மோடி தோற்றுவிடுவார் என்று தமிழக மக்கள் பெரிதும் நம்பினர். அதற்கு நமது தீவிர பிரச்சாரமும் ஒரு காரணம். எனவேதான் அதிமுக- பாஜக கூட்டணியை தமிழக மக்கள் ஆதரிக்கவில்லை.

தவிர அந்தத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்பி கூட கிடைக்கவில்லை.
என்ற போதிலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மோடிதான் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று பாஜக இப்போதே தீவிரமாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டது. இதை நாம் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

ஏனென்றால் 2024 தேர்தலிலும் காங்கிரஸ் தோற்றுவிட்டால் தமிழகத்தில் நம்மால் அரசியல் செய்வதே கடினமாகி விடும். சென்ற முறை திமுகவிடம் 9 தொகுதிகளை பெற்று போட்டியிட்டோம். இந்த முறை 15 தொகுதிகளாவது கேட்டு பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அப்போதுதான் நமக்கு கூடுதல் எம்பிக்கள் கிடைப்பார்கள்.

கேஎஸ் அழகிரி பேச்சு

அதற்காக காங்கிரசை ஒவ்வொரு தொகுதியிலும் பலப்படுத்த வேண்டும். அதற்கான பணிகளை இப்போதே தொடங்கவும் வேண்டும். குறிப்பாக பூத் கமிட்டிகளை அமைப்பது, காங்கிரஸ் ஆதரவாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது போன்ற பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் மோடி அரசின் மக்களைப் பிளவு படுத்தும் அரசியலை வீடு வீடாக பிரச்சாரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும்” என்று ஆலோசனை கூட்டத்தில் அழகிரி பேசியதாக தெரிய வந்துள்ளது.

“திமுக கூட்டணியில், காங்கிரஸ் எதிர்பார்க்கும் 15 தொகுதிகள் இந்த முறை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். நான்கு தொகுதிகளை திமுக ஒதுக்கினாலே ஆச்சரியமான விஷயமாக இருக்கும்” என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஸ்டாலின் போட்ட பிளான்

“அதற்கான காரணம் வெளிப்படையாக தெரிந்த ஒன்று. கடந்த ஒரு வருடமாகவே திமுகவின் திராவிட மாடல் ஆட்சி, நாட்டிற்கே சிறந்த வழிகாட்டி என்று முதலமைச்சர் ஸ்டாலின் பொது வெளியில் பேசி வருகிறார். அதனால் தேசிய அளவில் தானும் ஒரு மிகப்பெரிய தலைவராக உருவாகவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருப்பது, தெளிவாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்கிற வரிசை பட்டியலில் மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், நிதிஷ் குமார் ஆகியோருக்கு அடுத்ததாக ஸ்டாலின் பெயரும் இருக்கிறது.

ஒருவேளை பிரதமர் பதவிக்கு ஸ்டாலின் ஆசைப்படாவிட்டால் எதிர்க்கட்சிகள் அமைக்கும் அரசில் திமுக வலிமை வாய்ந்த சக்தியாக திகழவேண்டும் என்று அவர் கருதவும் செய்யலாம்.

காங்கிரஸ் வெளியேற வாய்ப்பு

இத்தகைய நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம். மேலும் ராகுலை இந்த முறை, பிரதமர் வேட்பாளராக முன்கூட்டியே அறிவிக்க ஸ்டாலின் தயங்கவும் செய்வார். அதை கன்னியாகுமரியில் ராகுல் தொடங்கிய இந்திய ஒற்றுமை பாத யாத்திரையின் போதே உணர முடிந்தது.

ராகுலின் நடை பயணத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அப்போதிலிருந்தே அகில இந்திய அளவில் காங்கிரஸ்-திமுக இடையான உறவில் புகைச்சல் உருவாகிவிட்டது.

அதிகமா கேட்டு வைப்போம்

ஆனால் தமிழகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்களோ இதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து திமுகவை ஆதரித்து வருகின்றனர். இதிலும் கூட தற்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை, முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திமுகவிடம் முரண்பட்டு உள்ளனர். ஆனால் இதை அவர்களால் நேரடியாக ஸ்டாலினிடம் சொல்ல முடியவில்லை என்பதும் உண்மை.

அதை மறைக்கும் நோக்கில் தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், முன்னிலையில் பேசும்போது கே எஸ் அழகிரி 15 தொகுதிகள் திமுகவிடம் கேட்போம் என்று அதிரடியாக குறிப்பிட்டு இருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.

வாய்ப்பே இல்லை

இத்தனை தொகுதிகள் கேட்டால் தான், கடந்த தேர்தலில் ஒதுக்கிய தொகுதிகளாவது தருவார்கள் என்ற எண்ணத்தில் கூட அவர் இப்படி பேசி இருக்கலாம்.

அதேநேரம் திமுக கூட்டணியில் பாமகவும், தேமுதிகவும் சேர்ந்து விட்டால் காங்கிரசார் இத்தனை தொகுதிகளை ஒருபோதும் கேட்கவே முடியாது. ஏனென்றால் அப்போது தங்கள் கூட்டணியில் ஓட்டு சதவீதம் மிகக் குறைவாக கொண்டுள்ள காங்கிரசை கழற்றிவிடவே திமுக விரும்பும்.

சவாலாக உருவெடுத்துள்ள அதிமுக

இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். உட்கட்சி பிரச்சினைகளால் அதிமுக வலுவாக இல்லை என்று திமுக தலைவர்கள் போலவே கே எஸ் அழகிரியும் கருதுவது தவறானது. ஏனென்றால் திமுகவை தீவிரமாக எதிர்க்கும் ஒரே அதிமுக தலைவர் என்ற பெயரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடையே உறுதிப்படுத்திவிட்டார். அதனால் அவருடைய தலைமையில் அதிமுக கூட்டணி அமையும்போது அது திமுகவுக்கு நிச்சயம் பெரும் சவாலாகவே அமையும்.

அழகிரி கூறுவதுபோல திமுக அரசின் மீது தமிழக மக்களுக்கு எதிர்ப்பு மன நிலை ஏற்பட்டிருந்தால் அது அதிமுக, பாஜக, பாமக,தேமுதிக, தமாக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் ஆகியவை ஒன்றாக இணைந்து போட்டியிடும் பட்சத்தில் அந்த கூட்டணி 27 தொகுதிகள் வரை வெற்றி பெறும் நிலையை ஏற்படுத்தும்” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் கணிக்கின்றனர்.

Views: - 325

0

0