சின்னாபின்னமான எதிர்க்கட்சிகள்! குடியரசுத் தலைவர் தேர்தலில் பின்வாங்கும் திமுக?

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, மார்க்சிஸ்ட், சிவசேனா கட்சிகள் போட்டு வைத்திருந்த எதிர்கால அரசியல் கணக்குகளை தவிடு பொடியாக்கி விட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகள் சிதறி சின்னாபின்னமாகியும் விட்டன.

5 மாநில தேர்தலில் பாஜக பிரம்மாண்ட வெற்றி

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை காங்கிரஸ் பறி கொடுத்து கிளீன் போல்டாகி விட்டது.

5 மாநில தேர்தல் முடிவுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் காங்கிரஸ் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது தெரிய வரும். நாட்டின் மிகப் பழமையான கட்சி என்று தன்னை பெருமை பேசிக் கொள்ளும் காங்கிரஸ் ஒரு மாநில கட்சி என்று சொல்லக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

கேரள மாடல் ஆட்சி என்று தம்பட்டம் அடிக்கும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கதையும் இந்த தேர்தலில் வேகவில்லை. இந்த கட்சிகள் போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதுடன் நோட்டாவுக்கு கீழே வாக்குகளைப் பெற்று டெபாசிட்டையும் பறி கொடுத்துள்ளன.

காங்., கட்சியின் படுதோல்வி

காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி 2024 தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை நிறுத்தலாம் என்ற கேள்விக்கும் குட்பை சொல்வதாக அமைந்துவிட்டது.

5 மாநில தேர்தலில் பாஜகவை வீழ்த்திவிட்டால் வருகிற ஜூலை மாதம் நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒருமனதாக ஒருவரை நிறுத்தலாம். அவர் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு குடைச்சல் கொடுக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி வைத்திருந்தன. அந்த எண்ணத்திலும் தற்போது மண் விழுந்துள்ளது.

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல்!!

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாகவே புதிய குடியரசுத் தலைவரை தேர்தெடுக்க தேர்தல் நடத்தப்பட்டு விடும்.

குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் வாக்காளர் குழுவில், நாடாளுமன்றத்தின் 543 எம்பிக்கள், டெல்லி மேல்-சபையில் 233 எம்பிக்கள், மாநில எம்எல்ஏக்கள் 4120 பேர் என மொத்தம் 4896 வாக்காளர்கள் உண்டு.

இதில் எம்பிக்கள் ஒவ்வொருவரின் வாக்கு மதிப்பும் 708 ஆகும். எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பு அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். இதில் மிக அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநில எம்எல்ஏ ஒருவரின் ஓட்டு மதிப்பு 208. தமிழகத்தில் 176.

இந்தக் கணக்கின்படி பார்த்தால் நாடு முழுவதும் உள்ள எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் மொத்த ஓட்டு மதிப்பு 11 லட்சத்துக்கு சற்று நெருக்கமாக வரும். இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டு பெறும் வேட்பாளர் புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்ற நடைமுறை நம் நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது.

வாக்கு வங்கியை அதிகப்படுத்திய பாஜக

தற்போது நடந்து முடிந்துள்ள 5 மாநில தேர்தல் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தனது வாக்கு வங்கியை பாஜக அதிகப்படுத்திக் கொண்டுள்ளது.
6.9 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டு மதிப்பு பாஜகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதனால் பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்படும் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

குடியரசுத் தலைவர் பதவியில் தமிழிசை?

இந்த நிலையில்தான் தெலுங்கானா ஆளுநரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான தமிழிசை சௌந்தரராஜனை குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட பாஜக விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் அண்மையில் வெளியானது. அல்லது பட்டியலின தலைவர் ஒருவருக்கே மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

அதேநேரம் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு அந்த வாய்ப்பை வழங்கி நாடு முழுவதும் இஸ்லாமியர்களிடையே நன்மதிப்பை அதிகப்படுத்திக் கொள்ளவும் பாஜக மேலிடம் ஆர்வம் காட்டுகிறது. 70 வயதாகும் இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 மாநில தேர்தலுக்கு முன்பாக 2022 குடியரசு தலைவர் தேர்தல், 2024 பிரதமர் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகள் மிகுந்த சுறுசுறுப்பு காட்டின. ஆனால் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையாததால் தற்போது இந்த விஷயங்கள் மீதான செயல்பாடு மந்தகதியில் உள்ளன.

பின்வாங்கும் திமுக

இதுபற்றி டெல்லியில் மூத்த அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, “திராவிட மாடல் ஆட்சி மூலம் நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி தேசிய அரசியலில் ஆர்வம் காட்டி வரும் திமுகவும் தற்போது குடியரசுத் தலைவர் தேர்தல் விஷயத்தில் பின்வாங்குவது கண்கூடாகத் தெரிகிறது.

நாட்டின் உயரிய அதிகாரம் கொண்ட தலைவர் தேர்தலில் போட்டியிட திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரை நிறுத்தவேண்டும் என்று காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலினை மறைமுகமாக வலியுறுத்தவும் செய்தன. அந்த தலைவர் வெற்றி பெற்றால் நீட் தேர்வை ரத்து செய்து விடலாம், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை பெற்றுத் தரலாம் என்ற நம்பிக்கையில் திமுக தலைமையும் அதற்கு முதலில் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

திமுக தலைமை மறுப்பு

ஆனால் தற்போது நிலைமை எதிர்க்கட்சிகளுக்கு அனுகூலமாக இல்லை என்பதை திமுக நன்கு உணர்ந்து கொண்டுள்ளது. டெல்லி மேல்-சபையில் இன்னும் சில மாதங்களில் பதவி காலம் முடிய இருக்கும் 73 எம்பிக்களுக்கு பதிலாக புதிய எம்பிக்கள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக தேர்வு செய்யப்பட வேண்டும். அப்போது பாஜகவின் பலம் டெல்லி மேல்-சபையில் இன்னும் அதிகரிக்கும். தவிர பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கிறது. மேலும் 2017 நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணிக்கு இருந்த எம்பிக்களின் எண்ணிக்கையை விட தற்போது 50 பேர் அதிகமாக உள்ளனர்.

இதனால் குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்படும் திமுக வேட்பாளர் தோல்வியைத் தழுவ நேர்ந்தால் அது தமிழகத்தில் திமுகவுக்கு செல்வாக்கை குறைத்து விடும் என்பதை உணர்ந்துகொண்டு தங்களுக்கு வந்த குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் வாய்ப்பை திமுக தலைமை தற்போது மறுத்து இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

என்ன செய்யப் போகிறது எதிர்க்கட்சிகள்!!

இதன் காரணமாக ஏற்கனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் சார்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை களம் இறக்க எடுத்திருந்த முடிவை மறுபரிசீலனை செய்யும் நிலையும் உருவாகி இருக்கிறது. இதை சரத்பவார் ஏற்பாரா? என்பது தெரியவில்லை. ஏனென்றால் எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடக்கும் நிலையில் குடியரசுத் தலைவர் பதவியை கைப்பற்றுவது கடினம் என்பதை அவரும் உணர்ந்துள்ளார். இப்படி பலரும் நழுவிக் கொள்ளும் நிலைதான் தற்போது காணப்படுகிறது.

இதனால் தோல்வியை அரை குறை மனதோடு ஒப்புக்கொள்ளும் விதமாக எதிர்க்கட்சிகள் சார்பில் கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் நிறுத்தப்படும் வாய்ப்பே அதிகம் உள்ளது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் அடித்துக் கூறுகின்றனர். எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

3 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

3 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

4 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

5 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

5 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

6 hours ago

This website uses cookies.