கரூரில் 5வது நாளாக ரெய்டு.. அமைச்சரின் சகோதரருக்கு சம்மன் ; திமுகவினர் மீது பாய்ந்தது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்

Author: Babu Lakshmanan
30 May 2023, 4:45 pm
Quick Share

கரூரில் வருமான வரி சோதனையின் போது அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற கடுமையான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த 26ம் தேதி தொடங்கிய வருமானவரித்துறை சோதனை ஐந்தாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. இந்த நிலையில், கடந்த 26ம் தேதி கரூர் மற்றும் ராயனூர் பகுதிகளில் சோதனைகளைச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தனர். குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்த சென்ற அதிகாரிகளை திமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று ராயனூர் பகுதியில் வருமானவரித்துறை அதிகாரிகளை தடுத்த வழக்கில் திமுக ஐ.டி விங் துணை அமைப்பாளர் விக்னேஷ், மத்திய கிழக்கு விவசாய அணி அமைப்பாளர் கிருஷ்ணன், கனகராஜன், சதீஷ்குமார் ஆகிய நான்கு திமுகவினரை தாந்தோணிமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, வருமானவரித்துறை அதிகாரிகளை தடுத்த வழக்கில், கைது செய்யப்பட்ட நபர்கள் மீது, ஏற்கனவே அரசு அதிகாரிகளை தடுத்தல், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல், மிரட்டல் விடுத்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற கடுமையான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் சென்னை வருமான வரித்துறை உதவி இயக்குனர் நாகராஜ் அனுப்பிய சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. அதில் இன்று காலை 10:30 மணிக்குள் அவரோ அல்லது அவர் சார்பாக பிரதிநிதி ஒருவர் சின்னாண்டாங் கோவில் பகுதியில் அமைந்துள்ள வருமானவரித்துறை பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, கணக்கு வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அசோக்குமாரின் ஆடிட்டர் ஒருவர் ஆஜராகி கால அவகாசம் கேட்டு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 145

0

0