பெண் கவுன்சிலரை கடத்திச் சென்ற திமுக நிர்வாகிகள்.. குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கணவர் : ஆதரவளித்த பாஜக, காங்., கவுன்சிலர்கள்..!!

Author: Babu Lakshmanan
4 March 2022, 4:41 pm
Quick Share

திருவள்ளூர் : ஆரணி பேரூராட்சியில் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் வாக்களிக்கச் சென்ற சுயேட்சை பெண் கவுன்சிலரை திமுகவினர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுவதையொட்டி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, திமுக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் உடன் வந்த திமுகவினர், துணைத் தலைவர் பதவிக்கு ஆரணி பேரூராட்சியில் இரண்டு மணிக்கு மேல் வாக்களிக்க இருந்த நிலையில் 3-வது வார்டு பெண் கவுன்சிலர் பிரபாவதி என்பவரை கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினரிடம் தனது மனைவியை கொண்டு வந்து ஆரணி பேரூராட்சி அலுவலகம் முன்பு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பெண் கவுன்சிலர் பிரபாவதியின் கணவர் சேஷாத்ரி குழந்தையுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். காரில் கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவருடன் காங்கிரஸ், பாஜக கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது கணவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், காவல்துறையினர் கடத்திச் சென்றவர்களிடம் பேசி பெண் கவுன்சிலர் பிரபாவதியை அரை மணி நேரத்தில் மீட்டு அவரது கணவரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 717

0

0