குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்தி புறக்கணிப்பு… வடமாநிலங்களை மட்டுமே கொண்டது இந்தியா அல்ல : எம்பி கனிமொழி
Author: Babu Lakshmanan17 January 2022, 2:17 pm
குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களின் ஊர்திக்கான அனுமதியை மத்திய அரசு நிராகரித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாவின் போது, மாநிலங்களின் சிறப்பை பறைசாற்றும் விதமாக, வடிவமைக்கப்பட்ட வாகன ஊர்திகள் நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சியின் போதும் எல்லா மாநிலங்களின் அலங்கார அணி வகுப்பு வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. சில குறிப்பிட்ட மாநிலங்களின் அணிவகுப்பு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்த அணிவகுப்பு வாகனங்களின் தேர்வை மேற்கொள்வது மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிபுணர் குழு ஆகும்.
அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தினம் அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான மையக்கருவாக சுதந்திர போராட்ட வீரர்கள் என தேர்வு செய்யப்பட்டு, அதற்கேற்ற வகையில் வாகன ஊர்திகள் தயார் செய்யப்பட இருக்கின்றன.
இந்த நிலையில், மாநிலங்கள் வழங்கும் பரிந்துரை மற்றும் முன்மொழிவு அடிப்படையில் இந்த ஆண்டு 12 மாநிலங்களின் அணிவகுப்பு வாகனங்களுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், இவர்களைப் பற்றி சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனவும் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, மேற்குவங்காளத்தில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ரவிந்திரநாத் தாகூர் போன்ற விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையிலான அலங்கார ஊர்திக்கு முன்மொழிவு கொடுக்கப்பட்டதாகவும், அந்த அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படாதது வருத்தமளிப்பதாக மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தியா என்பது அனைவருக்குமானது என்றும், வடஇந்தியா மாநிலங்கள் மட்டுமே இந்தியா ஆகிவிடாது என்று மத்திய அரசின் முடிவுக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது.
இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.
தற்போது, நீட், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது அலங்கார வாகன ஊர்தி விவகாரம் தேசிய அரசியலில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0