திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் தொடரும் அதிருப்தி : அப்செட்டில் கம்யூனிஸ்ட்.. நாளை அவசர ஆலோசனை..!!!

3 March 2021, 8:36 pm
stalin-balakrishnan-muththarasan - updatenews360
Quick Share

திமுகவுடனான சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவது கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி குறைந்த தொகுதிகளை வழங்கப்படும் என்ற ஸ்டாலினின் முடிவுக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளை தவிர, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடனான திமுகவின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

தேசிய கட்சிகளான இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 சீட் வீதம் ஒதுக்கீடு செய்வதாக திமுக கூறியதாக தகவல் வெளியாகியது. ஆனால், தங்களுக்கு தலா 12 சீட்கள் வீதம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், இரு கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தையில் சிக்கலே நீடிக்கிறது. திமுக தனது முடிவில் பிடிவாதம் பிடிப்பதால், கூட்டணி கட்சிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்திய கம்யூ., மாநில நிர்வாக குழு கூட்டம் நாளை காலை கூடுகிறது. இந்தக் கூட்டம் வழக்கமாக நடைபெறும் கூட்டம்தான் என்று கட்சி நிர்வாகிகள் கூறிக் கொண்டாலும், தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை தங்களின் தொகுதி எண்ணிக்கை குறைத்து திமுகவிடம் பணிந்து போய்விட்டால், எதிர்வரும் காலங்களில் தொகுதி எண்ணிக்கையை மீண்டும் உயர்த்துவது என்பது அரிதான விஷயம் என கம்யூனிஸ்ட் கட்சியினர் நம்புகின்றனர். எனவே, திமுகவை தங்களின் வழிக்கு கொண்டு வருவது அல்லது மாற்று முடிவை தேடிக் கொள்வது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

Views: - 32

0

0