மீண்டும் தலைமை செயலகமாக மாறும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை…? இடமாற்றப்பட்ட கல்வெட்டால் பரபரப்பு..!!!

Author: Babu
15 September 2021, 6:42 pm
assembly - updatenews360
Quick Share

சென்னை : ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தலைமை செயலகத்திற்கான கல்வெட்டு மீண்டும் பொருத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக தலைமை செயலகக் கட்டிடம் கட்டி பல ஆண்டுகளாகி விட்டதால், புதிய தலைமைச் செயலகம் கட்ட 2006-11ம் ஆண்டு காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த முதலமைச்சர் கருணாநிதி திட்டமிட்டார். ரூ.581.80 கோடி செலவில், 2007ம் ஆண்டு இடமும் தேர்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கட்டுமானப் பணிகள் முடிந்து 2010ம் ஆண்டு ஜுலை மாதம் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

கர்நாடகாவில் உள்ள விதான சவுதா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சட்டசபை கட்டிடங்கள் கலை நயத்தோடு இருக்கும் நிலையில், திமுக அரசால் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எந்தவித அழகும் இல்லாமல் இருப்பதாக அப்போதைய தலைவர் ஜெயலலிதா விமர்சனம் செய்திருந்தார்.

Jayalalitha-updatenews360

இதைத் தொடர்ந்து, 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, புதிய சட்டமன்ற கட்டிடத்தை, ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையாக மாற்றம் செய்து போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். இதனால், புதிய சட்டமன்ற கட்டிடத்தை கட்டும் போது வைக்கப்பட்ட மன்மோகன்சிங், கருணாநிதி, சோனியா காந்தி ஆகியோரின் பெயர்கள் பொரித்த கல்வெட்டும் அகற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அதிமுக ஆட்சியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது.

தற்போது, தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், கருணாநிதி காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட திட்டங்களை கொண்டு வருவதில், முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரம காட்டி வருகிறார். இந்த நிலையில், ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தலைமை செயலகத்திற்கான கல்வெட்டு மீண்டும் பொருத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் பொருத்தப்பட்டுள்ள கல்வெட்டில் புதிய தலைமைச் செயலகம் என்ற பெயரும் இடம்பெற்றிருப்பதால், தலைமைச் செயலக கட்டிடம் மாற்றப்படுகிறதா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில், நவீன வசதி கொண்ட மருத்துவமனை கட்டிடத்தை இடமாற்றம் செய்தால், திமுக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும் என்ற அபாயமும் உருவாகியுள்ளது.

Views: - 143

0

0

Leave a Reply