வன்னியர் உள் இடஒதுக்கீடு கோரிக்கை : முதலமைச்சரின் பச்சைக்கொடி அ.தி.மு.க.-பா.ம.க. அணிக்கு வெற்றிக்கொடியாக வாய்ப்பு !!

14 September 2020, 5:32 pm
pmk-aiadmk-alliance- updatenews360
Quick Share

சென்னை: வன்னியருக்கு கல்வி வேலைவாய்ப்பில் தனியாக உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் பாமக கையில் எடுத்துள்ள நிலையில், அக்கோரிக்கை குறித்து அதிமுக அரசு சார்பில் ஏதேனும் அறிவிப்போ, நடவடிக்கையோ, இருக்குமானால், வட மாவட்டங்களிலும் முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்திலும், அதிமுக-பாமக கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

ராமசாமி படையாச்சி மணிமண்டபம் திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே இக்கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்று பச்சைக்கொடி காட்டியிருந்தார். தேர்தலுக்கு முன்பு அதிமுக அரசு இது குறித்து அறிவிப்பு வெளியிடவோ, நடவடிக்கை எடுக்கவோ வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகின்றன. வட மாவட்டங்களில் ஓரளவு வலுவாக இருக்கும் திமுகவை எதிர்கொள்ள இந்த வியூகம் பயன்படும் என்று கூறப்படுகிறது.

செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற பாமக சிறப்புப் பொதுக்குழுவில் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் அன்புமணியை முதலமைச்சராக முன்னிறுத்துவது குறித்து முன்னணித் தலைவர்கள் கருத்து தெரிவித்தாலும், அது குறித்து தீர்மானம் எதுவும் பாமக நிறைவேற்றவில்லை. இது கூட்டணியில் அக்கட்சி தொடர விரும்புவதையே காட்டுவதாகக் கூறப்பட்டது. சிறப்புப் பொதுக்குழுவில் ‘அன்புமணி முதல்வர் வேட்பாளர்’ என்னும் முழக்கம் மீண்டும் உயிர்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுக்குழுவில் அது குறித்துத் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. பாமகவின் இந்த நிலைப்பாடு அதிமுக தலைவர்கள் மத்தியிலும் தொண்டர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்றும், அதற்கான தனிச் சட்டத்தை சட்டப்பேரவையில் விரைவாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் 27% ஓபிசி இட ஒதுக்கீட்டில் தொகுப்பு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுப் பணிகளில் ஓபிசிகளுக்கான 27% இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.

மத்திய அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனப்பணிகளில் ஒவ்வொரு நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அவை 27 விழுக்காட்டை விட எந்த அளவு குறைவாக உள்ளனவோ, அவற்றைப் பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வு மூலம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் கோரப்பட்டது.

pmk ramadoss updatenews360

அதிமுக கூட்டணியில் பாமக நீடிப்பது 2021-தேர்தலில் கூட்டணிக்கு வலிமை சேர்க்கும். தற்போதைய சட்டமன்றத்தில் பாமகவுக்கு ஒரு இடம் கூட இல்லை. நாடாளுமன்ற மேலவையில் மட்டும் ஒரு உறுப்பினர் (அன்புமணி) இருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அங்கீகாரத்துக்குத் தேவையான இடங்களையும் ஓட்டுகளையும் வெல்லும் வாய்ப்பு பாமகவுக்கு இருக்கிறது. மூன்றாவது அணி அமைப்பதோ தனித்துப் போட்டியிடுவதோ கட்சியின் அங்கீகாரத்தை மீட்டுத்தராது.

வெறும் கூட்டணி அமைப்பது மட்டும் முழுவெற்றியைப் பெற்றுத்தராது என்பதால், வன்னியர் வாக்குகளைப் பெருமளவு திரட்ட வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கையை பாமக கையில் எடுத்துள்ளது. திமுக கூட்டணியில் பாமகவில் இருந்து பிரிந்து சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இருக்கும் நிலையில் வன்னியருக்கு பாமக என்ன செய்தது என்ற கேள்வியை அவரோடு சேர்ந்து திமுகவும் எழுப்பத் திட்டமிட்டுள்ளது.

எனவே, தேர்தலுக்கு முன்பே வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கையே நிறைவேற்றுவது குறித்து அதிமுக அறிவிப்பு வெளியிட்டால் அதை வைத்துத் தேர்தலை எதிர்கொள்வது எளிதாக இருக்கும். வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் வன்னியர் அதிகமுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய வட மாவட்டங்களிலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் அரியலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், கொங்குப்பகுதியில் சேலம் மாவட்டத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறலாம் என்று பாமக கருதுகிறது.

வன்னியர் இட ஒதுக்கீடுப் பிரச்சினை தேர்தல் முடிவுகளை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று பாமக எண்ணுகிறது. அதிமுகவும் அக்கோரிக்கையை செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று பாமக நிர்வாகிகள் உறுதியாக நம்புகின்றனர்.

Views: - 1

0

0