‘உலகம் தலைகீழாக போகிறது’: சர்வதேச விருதை தட்டிச்சென்ற ஒராங்குட்டான் புகைப்படம்..!!

5 June 2021, 1:00 pm
kerala photo - updatenews360
Quick Share

ஓட்டாவா: கேரளாவைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்பவர் ‘உலகம் தலைகீழாக போகிறது’ என்ற தலைப்பில் எடுத்தப் புகைப்படம் சர்வதேச விருதைப் பெற்றுள்ளது.

கேரள புகைப்பட கலைஞர் தாமஸ் விஜயன். இவர் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தில் ஓராங்குட்டான் ஒன்று மரத்தை அணைத்தப்படி தலைகீழாக தொங்கிக்கொண்டு இருப்பதுபோல் இருக்கிறது. அதற்கு மேலே, மரத்தின் இலைகள், வானம் தெரிகின்றன.

‘உலகம் தலைகீழாகப் போகிறது’ என்று பெயரிடப்பட்ட இந்தப் புகைப்படத்துக்கு நேச்சர் டிடிஎல் என்ற சர்வதேச அமைப்பு 2021ம் ஆண்டுக்கான சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருதை வழங்கியுள்ளது. ‘இந்தப் புகைப்படத்தை ஒருவர் எளிதில் கடந்து செல்ல முடியாது’ என்று நேச்சர் டிடிஎல் தெரிவித்துள்ளது.

இந்தப் புகைப்படம் பார்ப்பவரை ஒரு கணம் குழப்பத்துக்கு ஆட்படுத்தும். ஒராங்குட்டான் தலைகீழாக தொங்கிக்கொண்டிருப்பது போல் தோன்றச் செய்யும். ஆனால், ஒராங்குட்டான் தலைக்கீழாக தொங்கவில்லை. மரத்தின் இலைகளும், வானமும் நீரில் பிரதிபலிக்கின்றன.

கேரளாவைச் சேர்ந்த தாமஸ் விஜயன் தற்போது கனடா நாட்டில் வசித்து வருகிறார். வன விலங்குகளை புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். போர்னியா தீவுக்குச் சென்றபோது, அவருக்கு இப்படி ஒரு காட்சியை புகைப்படமாக எடுக்க தோன்றியிருக்கிறது. அதற்காக நீர் நடுவே இருக்கும் மரத்தை தேர்வு செய்துள்ளார். அந்த மரத்தில் ஏறி நின்று, அந்தப் பகுதிக்கு வழக்கமாக வரும் ஓராங்குட்டானுக்காக காத்திருந்தார்.

அவர் எதிர்பார்த்தபடி ஒராங்குட்டான் அந்த மரத்துக்கு வந்து ஏறியது. அந்தக் கணத்தை கலாப்பூர்வமாக படம் பிடித்துள்ளார் தாமஸ். 8000 க்கு மேற்பட்ட படங்கள் இடம்பெற்ற அந்தப் போட்டியில், தாமஸ் விஜயனின் இந்தப் புகைப்படம் விருது பெற்றுள்ளது. 1,500 பவுண்ட் விருதுத் தொகையாக அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

Views: - 196

0

0