ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர் இடையே மோதல்…! ஆன்மீக அரசியலால் மூடப்பட்டதா ஐபேக் அலுவலகம்..?
14 August 2020, 2:39 pmசென்னை: திமுகவுக்கும், ஐபேக் நிறுவனத்துக்கும் உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவின் தேர்தல் ஆலோசனை, அதன் பணிகளுக்காக அக்கட்சி பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதற்காக கைமாறப்பட்டது ரூ.380 கோடி. பின்னர் களத்தில் இறங்கிய ஐபேக் பல கட்ட சர்வேக்களை எடுத்து திமுக தலைமையிடம் அளித்தது.
கட்சி நிர்வாகிகள் இனி எப்படி இருக்க வேண்டும்? என்ன மாதிரியான போராட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல டிசைன்களை வடிவமைத்தது. அதன் தாக்கம் திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் எதிரொலிக்க, கருத்து மோதல்கள் வலுத்தன.
இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, கட்சியின் அண்மையில் வெடித்து கிளம்பியது கறுப்பர் கூட்ட விவகாரம். அதன் பின்னணியில் இருக்கும் முக்கிய நிர்வாகி ஒருவர் திமுகவுடன் நேரடி தொடர்பில் இருந்தவர். இப்படி ஒரு சிக்கல் திமுகவில் நீடிக்க…. மற்றொரு சிக்கல் அக்கட்சியில் ஐடி அணியிலும் நீடிக்கிறது.
அதாவது அதிமுக, பாஜக கட்சிகளின் ஐடி அணி போன்று திமுக இல்லை, பரபரப்பான உத்வேகமாக நடவடிக்கை இல்லை என்பது தான் அது. இதுபற்றி பல கட்டங்களில் ஸ்டாலினிடம் நேரடியாக எடுத்துச் சொல்லப்பட்டாலும் அதை அவர் கண்டுகொண்டதாக தெரியவில்லை என்று புலம்புகின்றனர் உ.பிக்கள்.
ஐடி அணி சிறப்பு என்று இன்னமும் பேசி வருகிறார் ஸ்டாலின். ஐடி அணி மாநில செயலராக, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் உள்ளார். பாரம்பரியமிக்க ஆன்மிக குடும்பம். அதுவே ஆன்மிக அரசியல், மதம், சாதி போன்ற கருத்துக்களை புறக்கணிக்க காரணம் ஆகி விடுகிறது என்று ஒரு பேச்சு உண்டு..
இப்படி ஒரு பக்கம் திமுக ஐடி அணி தனி ஆவர்த்தனம் பாடிக் கொண்டிருக்க, திமுக மீது இந்துக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதை சரிப்படுத்த ஆடிப்பெருக்கு, கிருஷ்ணர் ஜெயந்திக்கு, திமுக பிரமுகர்கள் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டி வரவேற்றுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையும், திமுகவினர் வழக்கத்துக்கு மாறாக தங்களது குடும்பத்தினருடன் கொண்டாட உள்ளனர். இதுபோன்று திமுக மீதான வெறுப்பை சரிசெய்ய வேண்டும் என்று பிகே டீம் ஆலோசனைகளை அள்ளிவிட்டுள்ளது.
ஆனால் இப்போது இந்து விரோதம் தொடர்பாக திமுகவுக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் புகைச்சல் ஆரம்பித்து உள்ளதாம். அதன் விவரம் இதுதான்: திமுக ஐடி அணி துணை செயலர்கள் கார்த்திக், அப்துல்லா இருவரும் ஐபேக் சிறப்பு பிரதிநிதிகளாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இவர்களை பிரசாந்த் கிஷோர் விரும்பவில்லை, திமுக தம்மை வேவு பார்க்கிறது, ஏதோ உள்குத்து இருக்கிறது என்று நினைக்க ஆரம்பித்து உள்ளாராம். அதன் விளைவே, சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வந்த ஐபேக் நிறுவன அலுவலகம் மூடப்பட்டுள்ளதாம்.
கொரோனா தான் என்று பரவலாக கூறப்பட்டாலும், காரணம் அது கிடையாதாம். ஐடி அணி எம்எல்ஏ வாரிசுக்கும், பிகேவுக்கும் இடையே எழுந்த மோதல் கடைசியில் அலுவலகத்துக்கு பூட்டு போடும் அளவுக்கு சென்றுவிட்டதாம்.
இப்போது, ஐபேக் நிறுவனமானது அண்ணாநகரில் இருந்து இடம்மாற போகிறது, கிண்டி, தி.நகர் ஆகிய பகுதிகளில் புதிய அலுவலகம் அமைக்க, ஜரூராக இடம் தேடப்பட்டு வருகிறதாம். கட்சிக்குள் எப்போது பார்த்தாலும் ஒரு நிலையான செயல்பாடு இல்லாமல், இஷ்டம் போல பிரசாந்த் கிஷோர் பேச்சை கேட்பது, பின்னர் ஆட்களை அனுப்பி உளவு பார்ப்பது எதற்கு? திமுககாரனுக்கு தெரியாத கட்சி பணி, தேர்தல் வேலையா? என்று கொதிக்கின்றனராம்…!