விளையாட்டில் புகுந்த அரசியல்… சென்னை ரசிகர்களால் IPLக்கு சிக்கலா…? கிரிக்கெட்டில் எழுந்த சலசலப்பு!!

Author: Babu Lakshmanan
16 October 2021, 5:23 pm
IPL - updatenews360
Quick Share

அரேபிய தீபகற்பத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக நாட்டின் சார்ஜா, துபாய், அபுதாபி போன்ற முக்கிய நகரங்களில் இந்தியாவின் பிரபல 20 ஓவர் கிரிக்கெட் தொடரான IPL அண்மையில் நடந்து முடிந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் இப்போட்டி உலகிலேயே அதிகமான ரசிகர்களை ஈர்க்கும் ஒரே கிரிக்கெட் தொடரும் ஆகும். இதனால் இந்த போட்டிகளுக்கு கிரிக்கெட் விளையாடப்படும் அனைத்து நாடுகளிலும் நல்ல வரவேற்பு உண்டு.

அமீரகத்தில் ஐபிஎல்

இது,14-வது ஐபிஎல் தொடர்.

பொதுவாக இந்த போட்டித் தொடர் இந்தியாவில்தான் நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9 முதல் மே 30 வரை தொடரை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் மே 4-ம் தேதி அன்று தொடர் பாதியிலேயே கைவிடப்பட்டது.

பின்னர், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய போட்டிகள் திட்டமிட்டபடி நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடந்து முடிந்துள்ளன.

இந்த போட்டிகளை நடத்த தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜமைக்கா உள்ளிட்ட கரீபிய நாடுகளும் முன்வந்தன. எனினும் ஏற்கனவே இந்தியாவில் கடந்த வருடம் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐபிஎல் ஆட்டங்கள் தடைப்பட்டபோது ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. அதனால்தான் ஐபிஎல் தொடரை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இந்த வாய்ப்பை மீண்டும் அமீரகத்துக்கே வழங்க முடிவு செய்தனர்.

ஸ்டாலின் குடும்பம்

இதன் இறுதி ஆட்டம் நேற்று இரவு துபாய் நகரில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிய பரபரப்பான ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது, கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிந்த விஷயம்.

இப்போட்டியை தீவிர கிரிக்கெட் ரசிகரான திமுக இளைஞரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி தனது குடும்பத்தினரோடு நேரில் கண்டு களித்தது, குறிப்பிடத்தக்கது.

ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் கேலரியில் உட்கார்ந்திருந்த ரசிகர்களில் இருவர் தனித்தனியாக தங்களது கைகளில் தூக்கிப் பிடித்து காண்பித்த பதாகைகள் தற்போது
சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

#ஒத்த ஓட்டு பாஜக

அந்த வீடியோ காட்சியில் சென்னை அணியின் ஜெர்ஸி உடையை நினைவுபடுத்தும் விதமாக மஞ்சள் நிற உடையை அணிந்திருந்த ஒருவர் எழுந்து நின்று,”Thank You, Tamil Nadu CM MK Stalin Sir. Women Free Bus” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகையை உயர்த்திப் பிடித்து இருந்தார்.

அதேபோல மஞ்சள் நிற ஜெர்ஸி அணிந்திருந்த இன்னொருவர் “#ஒத்த ஓட்டு பாஜக” என்று எழுதப்பட்ட பதாகையை உட்கார்ந்தபடி காண்பித்துக் கொண்டிருந்தார்.

இதுதான் தற்போது ஐபிஎல் தொடரை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. இது இந்திய அரசியலில் பெரும் விவாதத்துக்குரிய விஷயமாகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பதாகை அரசியல்

இது குறித்து விளையாட்டுத் துறை வல்லுநர்கள் கூறும்போது, “போட்டியை நேரலையில் ஒளிபரப்பிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கூட இந்த காட்சிகளை காண்பிக்காத நிலையில் ஒரு குறிப்பிட்ட தனியார் டிவி சேனல் அதை வீடியோவாக எடுத்து ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது.

பொதுவாக விளையாட்டு போட்டிகளை கண்டுகளிக்கும் ரசிகர், ரசிகைகள் அந்த ஆட்டங்களின் தன்மை, நாடு, அணி, விளையாடும் வீரர்கள், வீராங்கனைகள் அடிப்படையில்தான் வாழ்த்து பதாகைகளை கைகளில் பிடித்தவாறு உற்சாக கோஷம் எழுப்புவது வழக்கம். சில நேரங்களில் துள்ளிக் குதித்து நடனமும் ஆடுவார்கள்.

கிரிக்கெட் என்றால் பவுண்டரி, சிக்ஸர், பட்டைய கிளப்புங்க, கிளீன் போல்ட், கேம் சேஞ்சர், கேம் பினிஷர், வின்னிங் ஷாட் என்று பல விதமான பதாகைகளை மட்டுமே கையில் எடுத்து வருவார்கள். அதற்கு எப்போதும் அனுமதி உண்டு. சிலர் மைதான கேலரிக்கு வந்தபின்பு கையில் கிடைக்கும் தாளை எடுத்து ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப பாராட்டு வாசகங்களை எழுதி வீரர், வீராங்கனைகளை பரவசப்படுத்துவார்கள். இதுவும் அனுமதிக்கப்பட்ட ஒன்றே. சிலநாடுகள் வாத்தியக் கருவிகளை கொண்டுவந்து இசைக்கவும் அனுமதி அளித்துள்ளன.

மற்றபடி அரசியல் கட்சிகளை பாராட்டியோ இருநாடுகளின் தலைவர்கள், கொள்கை விவகாரங்கள் போன்றவற்றை ஆதரித்தோ, எதிர்த்தோ எந்த பதாகைகளையும் காட்டுவதற்கு அனுமதி கிடையாது. அதை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பக் கூடாது என்ற விதிமுறையும் உள்ளது. அதேபோல் விளையாட்டு வர்ணனையாளர்களுக்கும் பல கட்டுப்பாடுகள் உண்டு.

பிரிவினைவாதம்

6 வருடங்களுக்கு முன்பு, ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது, இந்தியாவின் ஒரு அங்கமான காஷ்மீரை, எங்களுக்கே சொந்தம் என்று எழுதப்பட்ட பதாகைகளை பாகிஸ்தானிய ரசிகர்கள் சிலர் திடீரென உயர்த்திப் பிடித்தனர். அதை போட்டியை ஒளிபரப்பிய சேனலும் நேரலையாக காட்டிவிட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற நகரங்களில் பாகிஸ்தானுடன் தனித்தொடர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதேபோல் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதையும் இந்தியா தவிர்த்து வருகிறது.

அதனால்தான் தற்போதெல்லாம் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த விஷயங்களில் மிகவும் கவனமாக செயல்படுகின்றன.

விளையாட்டு என்பது பிரபஞ்ச பொதுமொழிகளில் ஒன்று. அதை யார், வேண்டுமானாலும் ரசிக்கலாம். மொழியோ, ஆட்ட நுணுக்கமோ தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
அப்படி பெருமை வாய்ந்ததொரு விளையாட்டு தொடரில் சம்பந்தமே இல்லாமல் இதுபோல் காண்பிப்பது நேரலை ஒளிபரப்பு விதிமுறைகளுக்கு எதிரானது.

மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தலை வலியைத் தரும் சமாச்சாரமும் கூட. அவசர காலத்தில் ஐபிஎல் தொடரை நடத்த கை கொடுத்து உதவிய ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இது தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் என்னவாகும்?…எதிர்காலத்தில் ஏதாவது ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டால் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்குமா? என்பது சந்தேகம்தான்” என்று அந்த வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.

சந்தேகம்தான்

டெல்லியை சேர்ந்த அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “விளையாட்டு அரங்கத்தை அரசியல் மேடையாக்குவது அநாகரீகமான செயல். இப்படி பதாகைகளை ஏந்தி காண்பித்தவர்கள், இறுதி ஆட்டத்தை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து நேரடியாக சென்றவர்களா?… அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலேயே வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா என்பது தெரியவில்லை. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு மைதானத்தில் அரசியல் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் செய்யக்கூடாது என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். அதையும் மீறி இவர்கள் நடந்து கொண்டிருப்பது போல்தான் தெரிகிறது. யாருடைய தூண்டுதலின் பேரிலாவது இது நடந்ததா? என்ற விசாரணையும் நடத்தப்படலாம். எப்படிப் பார்த்தாலும் இந்த பதாகைகளை காண்பித்தவர்களுக்கு சிக்கல்தான். மத்தியில் ஆளும் பாஜக அரசை கேலி செய்வதுபோல வாசகங்கள் இருப்பதால் இப்பிரச்சினை அரசியல் ரீதியாகவும் சிலருக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவதுபோல ஐபிஎல் இறுதி ஆட்டத்தின்போது துபாயில் நடந்த 2 தரமான சம்பவங்கள் என்று சிலர் வலைத்தளங்களில் இதை பரப்பி பாஜகவை மேலும் கடுப்பேற்றி வருகின்றனர்.

சிலர் தங்களை அதிபுத்திசாலிகளாக நினைத்துக்கொண்டு இப்படி தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இனி இந்தியாவில், குறிப்பாக சென்னையில் ஐபிஎல் போட்டி நடக்கும்போது கெடுபிடிகள் அதிகமாகலாம். இது அரசியல் மோதலை ஏற்படுத்தும் நிலையையும் உருவாக்கும்.” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 294

0

0