சென்னை காவல்துறைக்கு புதிய ஆணையர்…! 39 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

1 July 2020, 9:32 am
AK viswanathan 01 updatenews360
Quick Share

சென்னை: தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார். அவர்களில் 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐஜியாகவும், 9 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஐஜியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

சென்னை காவல்துறை ஆணையராக இருந்த ஏ.கே. விஸ்வநாதன் காவல் துறை செயலாக்கம் ஏ.டி.ஜி.பியாக மாற்றப்பட்டுள்ளார். ஆகையால் சென்னையின் புதிய காவல்துறை ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் காவல்துறை செயலாக்க டிஜிபியாக இருந்தவர்.

மதுரை காவல்துறை ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் என்பவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சென்னை காவல் துறையின் கூடுதல் ஆணையராக(தெற்கு) இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா மதுரை காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மத்திய மண்டல ஐ.ஜியாக இருந்த அமல்ராஜ் சென்னை காவல்துறை தலைமையகம் கூடுதல் ஆணையராகவும், சென்னை காவல்துறை தலைமையகம் கூடுதல் ஆணையராக இருந்த ஜெயராம் மத்திய மண்டல ஐ.ஜியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி ரவி சிறப்பு அதிரடிப்படை(ஈரோடு) ஏ.டி.ஜி.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி சரக டி.ஐ.ஜியாக இருந்த பாலகிருஷ்ணன் சென்னை காவல் துறையின் வடக்கு இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை சரக டி.ஐ.ஜி கார்த்திகேயன், திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் காவல் ஆணையர் சஞ்சய்குமார் தொழில்நுட்ப சேவை துறைக்கும், கோவை சரக டி.ஐ.ஜியாக நரேந்திரன் நாயரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply