ஸ்டாலின் உத்தரவை மீறிய சீனியர் அமைச்சர் துரைமுருகன் : நடவடிக்கை பாயுமா..?

Author: Aarthi Sivakumar
15 January 2022, 2:04 pm
Quick Share

வேலூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஊரடங்கு உத்தரவை மீறிய மூத்த அமைச்சர் துரைமுருகன் மீது வழக்கு பாயுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

கொரோனா தொற்று, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த வாரநாட்களில் இரவு ஊரடங்கும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை, சுகாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்தநிலையில் முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக் கிழமை மூத்த அமைச்சர் துரைமுருகனே அரசின் உத்தரவை மீறி கட்சியினரை சந்தித்து, ஊரடங்கு விதிகளை மீறி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 9ம் தேதியன்று முழு ஊரடங்கு நாளில் வேலூர் மாவட்ட திமுகவினர் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்தவர்களும் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டின் முன்பாக கூட்டமாகக் கூடி நின்றனர். ஆளுங்கட்சியினர் என்பதால் ஊரடங்கு கட்டுப்பாட்டிற்கு முழுக்கு போட்டு, கொரோனா தொற்று பரவ வழிவகை செய்துள்ளனர்.

தொண்டர்களுக்கு புத்தி சொல்ல வேண்டிய மூத்த அமைச்சர் துரைமுருகனும் ஊரடங்கு காலம் என்பதை மறந்து வீட்டின் முன்பாக கூடியிருந்த பல்வேறு கட்சிப் பிரமுகர்களை வழக்கம் போல் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனை கண்ட சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் கொதித்து போயி அரசுக்கு பல்வேறு கேள்விகளை சமூக வலைதளத்தில் எழுப்பி வருகின்றனர். இந்த நிகழ்விற்கு பொதுமக்களும் எங்களுக்கு ஒரு சட்டம் ஆளுங்கட்சியினருக்கு ஒரு சட்டமா என கொதித்தெழுந்துள்ளனர்.

ஆளுங்கட்சியின் மூத்த அமைச்சரே கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதால் துரைமுருகன் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம், முழு ஊரடங்கில் வாகனத்தில் செல்பவர்களுக்கு அபராதம் என பொதுமக்களிடம் ஸ்டிக்ட்ராக நடந்து கொள்ளும் போலீசார், மூத்த அமைச்சர் என்பதற்காகக கரிசனம் காட்டுமா அல்லது வழக்கு பதிவு செய்யுமா என்ற கேள்வி வேலூர் மாவட்டம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

மேலும், யாராக இருந்தாலும் அரசின் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Views: - 209

0

0