திமுகவுக்காக 2026ல் PK மீண்டும் வியூகமா?… விஜய் கட்சியால் திசை மாறும் அரசியல் களம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2024, 7:49 pm

திமுகவுக்காக 2026ல் PK மீண்டும் வியூகமா?… விஜய் கட்சியால் திசை மாறும் அரசியல் களம்!

2021 தமிழக தேர்தலில் திமுகவுக்காக வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் என்பது அரசியலில் உள்ளோர் அனைவருக்கும் தெரிந்த விஷயம். திமுக கூட்டணி 210 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறுவதற்கு அவர் திட்டம் தீட்டி கொடுத்தாலும் கூட 159 இடங்களைத்தான் அந்த அணியால் கைப்பற்ற முடிந்தது என்பது வேறு விஷயம்.

எனினும் அவருடைய ஐ பேக் நிறுவனத்திற்காக திமுக தரப்பிலிருந்து 360 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக அப்போது வெளியான தகவல் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இதை திமுக தலைமை இன்றுவரை மறுத்ததாக தெரியவில்லை.

2021 தேர்தலுக்குப் பிறகு பிரசாந்த் கிஷோர் எந்தவொரு மாநில கட்சிக்கும், தேசிய கட்சிக்கும் வியூகங்களை வகுத்துக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அவர் கூறிய காரணம், “இப்போது செய்வதை நான் தொடர விரும்பவில்லை. போதுமான அளவுக்கு உழைத்து விட்டேன். எனக்கு ஒரு இடைவேளை தேவைப்படுகிறது. வேறெதையாவது வாழ்வில் செய்ய ஆசைப்படுகிறேன். எனவே இந்த இடத்தில் இருந்து விலக விரும்புகிறேன். தேர்தல் ஆலோசனை கூறும் பணியில் இருந்து நான் விலகினாலும் எனது ஐ பேக் நிறுவனம் தொடர்ந்து இயங்கும்” என்று குறிப்பிட்டதுதான்.

அதேநேரம் பிரசாந்த் கிஷோர் இந்த மூன்று ஆண்டுகளில் தனிப்பட்ட முறையில் எதையும் சாதித்ததாக தெரியவில்லை. என்றபோதிலும் தேர்தல் நிலவரம் குறித்து அவர் அவ்வப்போது கருத்து தெரிவிக்க தயங்கியதும் கிடையாது. “மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது, அவரை வீழ்த்துவது அவ்வளவு சுலபமல்ல. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே அவருக்கு கடும் போட்டியை ஏற்படுத்த முடியும்” என்று காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அறிவுரை வழங்கியும் வருகிறார்.

மேலும் படிக்க: பெலிக்ஸ் ஜெரால்டு உயிருக்கு ஆபத்து… சவுக்கு சங்கரை போல பல வழக்குகள் பதிய சதி? மனைவி கண்ணீர் புகார்!

இந்த நிலையில்தான் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு வியூகங்களை வகுத்து கொடுக்க பிரசாந்த் கிஷோரின் உதவியை திமுக தலைவர் ஸ்டாலின் நாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அண்மையில் இதற்காக பாட்னாவில் இருந்து சென்னை வந்த பிரஷாந்த் கிஷோர் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மருமகன் சபரீசனை சந்தித்து பேசி, ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இத்தனைக்கும் ஏற்கனவே ஐ பேக் நிறுவனத்தில் பணியாற்றிய 702 ஊழியர்களில் 75 பேர் தற்போதும் திமுகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுத்தான் வருகின்றனர். இது தவிர சபரீசன் நடத்தும் ‘பென்’ என்ற நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்டோர் திமுகவுக்கு பல்வேறு வியூகங்களை வகுத்தும் கொடுக்கின்றனர். மேலும் திமுகவின் ஐடி விங்கும் ஏராளமான யோசனைகளை அறிவாலயத்திற்கு தொடர்ந்து அளித்துக் கொண்டேதான் இருக்கிறது.

அப்படி இருந்தும் கூட முன்பு பிரசாந்த் கிஷோர் அவ்வப்போது சென்னையில் தங்கி இருந்தவாறு
தனது ஐ பேக் ஊழியர்களை நேரடியாக வழி நடத்தி தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தது போன்ற திருப்தி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஏற்படவில்லை என்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்
பென் நிறுவனமும், திமுகவின் ஐடி விங்கும் எடுத்த ரகசிய சர்வேக்களில் இழுபறி தொகுதிகள் குறித்து துல்லியமாக கணிக்கப்படவில்லை என்று கூறப்படுவதுதான்.

39 நாடாளுமன்ற தொகுதிகளிலேயே தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பதையே உறுதியாக கணிக்க முடியாத நிலையில் 2026-ல் 234 தொகுதிகளை இவர்கள் எப்படி துல்லியமாக கணிப்பார்கள் என்ற சந்தேக கேள்வி திமுக தலைமையிடம் எழுந்துவிட்டது என்கிறார்கள்.

ஏனென்றால் அப்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுக கூட்டணிக்கு பலத்த சவாலை அளிக்கலாம். விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்கு நடிகரும், இயக்குனருமான சீமானின் நாம் தமிழர் கட்சி தயார் நிலையிலேயே இருக்கிறது. இன்னொரு பக்கம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக அத்தனை அஸ்திரங்களையும் கையில் எடுக்கும். பாஜக, பாமக, அமமுக கூட்டணியும் திமுகவுக்கு மற்றொரு அச்சுறுத்தலாக அமையும்.

இப்படி கடுமையான நான்கு முனை போட்டி நிலவும்போது 35 சதவீத ஓட்டுகள் கிடைத்தாலேபோதும் 130 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி விட முடியும் என்பது அரசியல் ரீதியான கணக்கு.

அதனால் காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றை கூட்டணியில் தக்கவைத்துக் கொண்டாலே எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை திமுக தலைமையிடம் நிறையவே உண்டு.

எனினும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காத காரணத்தால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி இரண்டும் திமுகவிடம் 2026 தமிழக தேர்தலில் அதிக தொகுதிகளை துணிந்து கேட்கலாம். அது கிடைக்காத பட்சத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று திமுகவை அந்த கட்சிகள் மிரட்டவும் செய்யலாம்.

இதுபோன்ற எதிர்பாராத நெருக்கடியான நிலைமையை சமாளிப்பதற்காகத்தான்
எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை எப்படியும் தங்கள் பக்கம் கொண்டு வந்து விடவேண்டும் என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் உறுதியாக இருந்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. இம்முறை சுமார்
600 கோடி ரூபாய் வரை பிரசாந்த் கிஷோருக்கு கொடுக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இன்னொரு பக்கம் தங்களது ஆட்சியின் சாதனைகளாக கூறப்படுவதை 2026 தேர்தல் வெற்றிக்கான நம்பிக்கையாக
திமுக பார்க்கவில்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.
இதற்கு அரசியல் விமர்சகர்கள் கூறும் பதில் இதுதான்.

“சாதாரண அரசு டவுன் பஸ்களில்
பெண்களுக்கு இலவச பயணம், தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை அரசு பள்ளிகளில் படித்து விட்டு பட்டப் படிப்பை அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும்
16 லட்சம் சிறுவர்-சிறுமிகளுக்கு இலவச காலை சிற்றுண்டி என்று பணப் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை திமுக அரசு தனது சாதனைகளாக கூறினாலும் கூட
2026 தேர்தலில் அது வெற்றிக்கு கை கொடுக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

ஏனென்றால் கேஸ் சிலிண்டர் மானியம் மாதம் நூறு ரூபாய், கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, டீசல் விலை லிட்டருக்கு நான்கு ரூபாய் குறைப்பு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிப்பு போன்ற நிறைவேற்றப்படாத திமுகவின் வாக்குறுதிகளும் தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படலாம்.

அதேநேரம் அதிமுக, பாஜக, தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை திமுக அரசு நிறைவேற்றிய நலத்திட்டங்களை விட அதிகமான வாக்குறுதிகளை தேர்தல் வெற்றிக்காக அறிவிக்கும் வாய்ப்புகளும் உண்டு. குறிப்பாக 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக அளித்த ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 3000 ரூபாய் என்னும் வாக்குறுதியை நிச்சயம் தனது பிரம்மாஸ்திரமாக கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். பாஜகவும் இதற்கு இணையாக அறிவிக்கும் வாய்ப்பும் உள்ளது. முதல் முறையாக தேர்தலை எதிர் கொள்வதால் நடிகர் விஜய்யும் தனது கட்சி சார்பில் ஏழ்மை நிலை பெண்களுக்காக கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிக்கலாம்.

இப்படி 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பல வழிகளிலும் முட்டுக்கட்டை விழலாம். அதையெல்லாம் தடுத்து மீண்டும் ஆட்சி அமைக்கும் நோக்கில்தான் பிரசாந்த் கிஷோரை திமுக மீண்டும் அழைத்திருக்கிறது என்றே கருதத் தோன்றுகிறது”
என அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

2021 தமிழக தேர்தலில் திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் இடையேதான் கடுமையான நேரடி போட்டி இருந்தது. ஆனால் 2026ல்
நிச்சயம் நான்கு முனை போட்டிதான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதுபோன்ற சூழலில் பிரசாந்த் கிஷோரின் வியூகம் திமுகவுக்கு கை கொடுக்குமா? என்பதை அறிந்து கொள்வதற்கு இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்கத்தான் வேண்டும்!

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!