கமலுக்கு மீண்டும் கடைசி இடமா…? : குறைவான இடங்களில் போட்டி: வாக்கு வங்கி இல்லாத கூட்டணி

Author: Udhayakumar Raman
22 March 2021, 9:36 pm
Quick Share

சென்னை: அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக வலுவான மூன்றாவது அணி அமைப்பார் என்று கருதப்பட்ட மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கத் திணறி வருகிறார் என்று தேர்தல் கள நிலவரங்கள் காட்டுகின்றன. சிறிதும் வலுவில்லாத கூட்டணிக்கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கியதால் வாக்கு சதவீதம் பெரிதும் குறையும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமைத்துள்ள வலுவான கூட்டணியால் பெரும்பாலான இடங்களில் மய்யத்தின் கூட்டணி ஐந்தாவது இடத்துக்குத் தள்ளப்படும் என்று கணிக்கப்படுகிறது.

மேலும், மையத்தின் தலைவர் இம்முறை தேர்தலில் நேரடியாகக் களம் இறங்கியுள்ளதால் பரவலாகப் பிரச்சாரம் செய்யாமல் கொங்குப் பகுதியில் கவனம் செலுத்திவருவதும் இதர பகுதிகளில் மய்யத்தின் வாக்குகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக 5.25 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது. நாம் தமிழர் கட்சி 3.88 சதவீத ஓட்டுக்களை வாங்கி நான்காவது இடத்தைப் பெற்றது. தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நடிகரான கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வெறும் 3.72 சதவீத வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்கு வந்தது. ஆனால், இந்த முறை கமல் ஹாசன் அதிமுக திமுகவுக்கு சவால்விடும் வகையில் வலுவான அணியை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திமுகவில் இருந்தும் அதிமுகவில் தொகுதி பிரச்சினையில் சில கட்சிகள் வெளியேறும் என்றும் கமலுடன் கைகோர்க்கும் என்றும் கருதப்பட்டது. திமுக அணியில் 25 இடங்களை ஏற்கக்கூடாது என்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்துடன் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டுமென்றும் காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான கருத்து உருவானது. கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அதற்கு ஆதரவளித்தார். ஆனால், கடைசி நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் பாஜக தமிழ் நாட்டில் காலூன்றிவிடும் என்றும் திமுக அணியில் நீடிக்கவேண்டும் என்றும் வெளிப்படையாகப் பேசினார்.

தனது மகன்களை எம்.எல்.ஏ.ஆக்க வேண்டும் என்று திட்டமிட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சு.திருநாவுக்கரசும் ஈ.வி,கே.எஸ் இளங்கோவனும் சிதம்பரத்தின் கருத்துக்கு ஆதரவாக தலைமையுடன் பேசினார்கள். ராகுல் முடிவை ஏற்று தமிழ் நாட்டில் பாஜக வெற்றிபெற்றுவிட்டால் ராகுலுக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என்பதாலும் கட்சியில் காந்தி குடும்பத்துக்கு எதிர்ப்பு வலுக்கும் என்பதாலும் சோனியாகாந்தி தலையிட்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதை உறுதி செய்தார். தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து வலுவான அணி அமைக்கும் வாய்ப்பு கடைசி நேரத்தில் கமலுக்குக் கை நழுவியது.

இருந்தபோதும் வெறும் ஆறு இடங்கள் மட்டும் தந்ததால் மார்சிஸ்ட் கட்சியும் விடுதலை சிறுத்தைகளும் திமுக கூட்டணியைவிட்டு வெளியேறி மக்கள் நீதி மய்யத்துடன் அணி சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரு கட்சிகளும் ஆறு இடங்களுக்கு உடன்பட்டு திமுக அணியில் நீடித்து கமலுக்கு அதிர்ச்சி தந்தனர். திமுக கூட்டணியில் இருந்து சிறிய கட்சியான இந்திய ஜனநாயகக் கட்சி மட்டும் வெளியில்வந்து மய்யத்துடன் சேர்ந்தது.
அடுத்து அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை கமல் குறிவைத்தார். அதிமுகவுடன் தொகுதி உடன்பாட்டில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெளியேறியவுடன் வெளிப்படையாக அந்தக் கட்சிக்கு அழைப்பு விடுத்தார் கமல்.

ஆனால், தினகரனின் அமமுகவுடன் தேமுதிக அணி சேர்ந்தது. தினகரன் வலுவான அணி அமைத்ததால் கமல்ஹாசனின் வலுவான மூன்றாவது அணிக் கனவு தகர்ந்தது. அதிமுக அணியில் இருந்து நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மட்டும் கமல் கூட்டணியில் சேர்ந்தது. முதலில் மய்யத்துடன் கைகோர்த்த எஸ்.டி.பி.ஐ கட்சி கூட கமல் அளித்த 18 இடங்களை உதறிவிட்டு தினகரனிடம் ஆறு தொகுதிகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். ஒரு பக்கம் தினகரனின் அணி பலம் பெற்றதுடன் கமல் அணி வலுக்குன்றியது. அடுத்த கட்டமாக வாக்கு வாங்கி இல்லாத இரண்டு கூட்டணிக் கட்சிகளுக்கு ஆளுக்கு 40 இடங்களை கமல் அள்ளித்தந்தார்.

இதில், போதிய வேட்பாளர் இல்லாத காரணத்தால் மூன்று தொகுதிகளை கமலிடம் திரும்பக் கொடுத்தது சமத்துவ மக்கள் கட்சி. மய்யம் 157 தொகுதிகளுக்கு அறிவிப்பாளர்களை அறிவித்தது. சமத்துவ மக்கள் கட்சியாலோ இந்திய ஜனநாயகக் கட்சியாலோ வாக்கு ஆதாயம் எதுவும் இல்லாத நிலையில் குறைவான தொகுதிகளில் நிற்பதால் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த 3.72 சதவீத ஓட்டுக்களையாவது மக்கள் நீதி மய்யம் தக்க வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வாக்கு சதவீதம் மேலும் குறைந்தால் மீண்டும் ஐந்தாவது இடந்தான் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக வட மாவட்டங்களிலும் கொங்கு மாவட்டங்களிலும் குறைவான ஓட்டுகளையே பெற்றிருந்தது.

இந்த முறை தேமுதிகவுடன் கூட்டு சேர்ந்துள்ளதால் தினகரன் கட்சி பெரும் வாக்குகள் அதிகரிக்கும் என்பதாலும் தென் மாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் அமமுகவுக்கு வலுவான வாக்கு வாங்கி இருப்பதாலும் பெரும்பாலான இடங்களில் கமல் கூட்டணி கடைசி இடத்துக்குத் தள்ளப்படும் என்று கருதப்படுகிறது. ஆனால், சென்னை நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் 25 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யமே மூன்றாவது இடம் பிடிக்கும் என்றும் கொங்கு மண்டலத்திலும் 12 இடங்களில் மூன்றாவது இடத்துக்கு வரும் என்றும் கமல் ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கில் வெற்றிபெறவோ,

இரண்டாம் இடம் பெறவோ வாய்ப்புள்ளது என்று மய்யத்தின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தமிழ் நாட்டில் 38 இடங்களில் மூன்றாவது இடத்தைப் பிடிப்பதால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல்வரை தாக்குப் பிடிப்பது கடினம் என்றே கருதப்படுகிறது. தாக்குப் பிடித்தாலும் கூட்டணிப் பேச்சுக்களில் பெரிய அளவு பேரம்பேசும் வலிமை இருக்க வாய்ப்புகள் இல்லையென்றே தெரிகிறது.

Views: - 64

0

0