திமுக கூட்டணியில் 3 தொகுதிகளிலும் ‘ஒயிட்-வாஷ்’ : காரணம் புரியாமல் தவிக்கும் முஸ்லிம் லீக்!!

16 May 2021, 8:10 pm
IMUL cover - updatenews360
Quick Share

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி கண்ட பல கட்சிகள் அந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றன. ஆனாலும் மக்கள் நீதி மய்யம், அமமக, தேமுதிக போன்ற கட்சிகள், எப்படி இவ்வளவு படு மோசமாக தோற்றோம் என்பதற்கான காரணம் தெரியாமல், இன்னும் குழப்பத்தில்தான் உள்ளன.

இந்த கட்சிகளாவது பரவாயில்லை. மூன்றாவது இடத்தைப் பிடிப்போமா?நான்காவது இடத்திற்கு வருவோமா? கடைசி இடத்திற்கு தள்ளப்படுவோமா? என்ற எதிர்பார்ப்புடன் இருந்த கட்சிகள். அதனால் இவை தோல்வி கண்டது, பெரிய விஷயமே அல்ல.

IUML 1 - updatenews360

அதே சமயம் மூன்றில் இரு பங்கு தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய திமுகவின் மெகா கூட்டணியில் இடம்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
கட்சியின் நிலைதான் மிகவும் பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது.

தேசிய கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்தத் தேர்தலில் கடையநல்லூர், சிதம்பரம், வாணியம்பாடி என 3 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இந்த மூன்றிலுமே மண்ணைக் கவ்வி இருக்கிறது.

2011 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த முஸ்லிம் லீக் அப்போதும் 3 தொகுதிகளில் போட்டியிட்டது. என்றபோதிலும் எந்த தொகுதியிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை.

எனவே அந்தக் கட்சி ‘ஒயிட்-வாஷ்’ ஆவது இது முதல்முறை அல்ல என்றே சொல்லவேண்டும். ஆனால் அந்த தேர்தல் முடிவுக்கும், 2021 சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை காணமுடியும். 2011 தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி கண்டது. 31 இடங்களையே திமுக- காங்கிரஸ் கூட்டணி அப்போது கைப்பற்றியது.

2016 தேர்தலில் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம், பூம்புகார், மணப்பாறை ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் கடையநல்லூரில் மட்டும் வெற்றி கண்டது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்தன. ஆனால் 2021தேர்தலில் திமுக காங்கிரஸ் மெகா கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

அதாவது திமுக கூட்டணி தோல்வி கண்டபோது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு இடம் கிடைத்துள்ளது. ஆனால் அக் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியபோது ஒரு இடம் கூட கிடைக்காமல் போய்விட்டது.

கடையநல்லூர் தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி கண்ட முகமது அபுபக்கர் இம்முறை அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளியிடம் 24 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்ட முகமது நயீம், அதிமுக வேட்பாளர் செந்தில் குமாரிடம் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

சிதம்பரம் தொகுதியில் களமிறக்கப்பட்ட ரஹ்மான் ரப்பானி 16 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பாண்டியனிடம் தோல்வி அடைந்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் மூவருமே அதிமுக வேட்பாளர்களிடம் தோல்வி கண்டதும், முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் தொகுதிகளிலேயே அவர்கள் தோற்றுப் போனதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் 2016 தேர்தலில் திமுக கூட்டணியில் தொண்டாமுத்தூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்ட இன்னொரு இஸ்லாமியர் கட்சியான மனிதநேய மக்கள் கட்சி அந்த நான்கு தொகுதிகளிலும் தோற்றுப்போனது.

இந்தத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் இடம் பெற்ற அக்கட்சி மணப்பாறை, பாபநாசம் என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றுள்ளதும் அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

3 தொகுதிகளில் போட்டியிட்டு தோற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது சொந்த சின்னமான ஏணியில் நின்றது. தனது கட்சிக்கு 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியபோது, மனிதநேய மக்கள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்தக் கட்சி என்ன நினைத்ததோ தெரியவில்லை. திமுகவின் சின்னமான உதயசூரியனிலேயே போட்டியிட்டது.

இதுபற்றி முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவர்கள் சிலர் கூறும்போது, “எங்கள் கட்சிக்கு கிடைத்த தோல்வி குறித்து கள ஆய்வு செய்து வருகிறோம். திமுக மிகப் பெரிய கூட்டணியை அமைத்து இருந்ததால் எங்களால் மூன்று தொகுதிகளிலும் எளிதாக வெற்றி பெற முடியும் என்று நம்பினோம். நூற்றாண்டு பழமை வாய்ந்த எங்கள் கட்சிக்கு இந்த முறை வெற்றி கிடைக்காமல் போனது மிகுந்த வருத்தத்துக்குரிய ஒன்றுதான். திமுகவின் சின்னத்தில் நின்றிருந்தால் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கலாமே என்கிறார்கள். ஆனால் எங்களுக்கென்று சொந்த சின்னம் இருக்கும்போது இன்னொரு சின்னத்தில் போட்டியிட்டால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதால் நாங்கள் அதை விரும்பவில்லை.

மேலும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஏணி சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட எங்கள் வேட்பாளர் நவாஸ்கனி சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனவே சின்னம் ஒரு காரணமாக இருக்க முடியாது. இதற்கு முன்பும் கூட நாங்கள் ஏணி சின்னத்தில்தான் போட்டியிட்டு இருக்கிறோம்.

ஆனால் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில், அதிமுக வேட்பாளர்களிடம் தோல்வி கண்டதைத்தான் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.
இதை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பல கிராமங்களில் எங்களுக்கு மிகக்குறைவான ஓட்டுகளே விழுந்துள்ளது. ஓட்டுகள் ஏன் கிடைக்கவில்லை என்பதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. கள ஆய்வை முழுமையாக முடித்த பிறகே இதுபற்றி விரிவாகக் கூற முடியும்” என்று தெரிவித்தனர்.

Views: - 318

0

0