பாலமேட்டில் தொடங்கியது ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகளை அடக்கும் காளையர்கள்..!!

15 January 2021, 9:38 am
palamedu jallikatu - updatenews360
Quick Share

மதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாட்டுப் பொங்கல் தினமான இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் 800 காளைகள் பங்கேற்கின்றன. காளைகளின் வயது, எடை, உடல்நிலை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 651 மாடுபிடி வீரர்கள் இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு மாடுகளை அடக்க தயாராக உள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு சுமார் 25 வீரர்கள் என்ற வகையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட உள்ளனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் திறந்து விடப்பட்டன.

அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் ஒவ்வொன்றாக திறந்து விடப்பட்டு வருகின்றன. மாட்டின் கொம்பு, வால் ஆகியவற்றை பிடிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டி மதுரை பாலமேட்டில் இன்று மாலை 4 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் காண பொது மக்கள் திரளான அளவில் அந்த பகுதிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். பார்வையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தக்க பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் சுமார் 2 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Views: - 9

0

0