ஜம்மு காஷ்மீரில் பள்ளி ஆசிரியர்கள் சுட்டுக்கொலை : கொல்வதற்கு முன்பு Id Card-ஐ சோதித்த தீவிரவாதிகள்… எதற்காக தெரியுமா..?
Author: Babu Lakshmanan8 October 2021, 1:41 pm
ஜம்மு – காஷ்மீரில் கொல்லுவதற்கு முன்பாக ஊழியர்களின் ஐடி கார்டை வாங்கி சோதனை செய்த பிறகு கொலைகளை தீவிரவாதிகள் அரங்கேற்றி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் ஒடுக்கப்பட்டிருந்த தீவிரவாதிகளின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. நாளொன்று 2 அல்லது 3 தீவிரவாதிகளாவது பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கு கொல்லப்பட்டு வருகின்றனர். அப்படி, கடந்த 5 நாட்களில் மட்டும் 7 தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்துக்கள், சீக்கியர்கள், பண்டிட்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இரு தினங்களுக்கு முன்பு ஸ்ரீநகரின் பிரபல பிந்த்ரோ மெடிகேட் என்னும் மருந்து கடையின் உரிமையாளர் மக்காள் லால் பிந்த்ரே, பேர் பூரி விற்பனையாளர் உள்பட 3 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இப்படி சிறுபான்மையினரை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்தும் தாக்குல் சம்பவம், அங்குள்ள மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தநிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்களை வெளியே இழுத்து வந்து தீவிரவாதிகள் கொடூரமாக சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வந்த நிலையில், ஆயுதங்களுடன் பள்ளியின் உள்ளே புகுந்த தீவிரவாதிகள், இஸ்லாமிய ஆசிரியர்களை விட்டு விட்டு, சிறுபான்மையினர்களான சீக்கிய மதத்தைச் சேர்ந்த சுக்விந்தரையும், இந்து மதத்தைச் சேர்ந்த தீபக் சந்த்தையும் பள்ளிக்கு வெளியே இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர்.
முன்னதாக, பள்ளிக்கு உள்ளே புகுந்த தீவிரவாதிகள், ஆசிரியர்களின் ஐடி கார்டை பறித்து, அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்த பிறகே, கொலை செய்துள்ளனர்.
காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதிகளின் ஆட்டம் ஆரம்பித்துள்ளதால், சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து, மீண்டும் அமைதியான ஜம்மு – காஷ்மீரை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
0
0