சரியான இடத்தில்… சரியான வாசகம்..! அதிமுகவினரின் தேர்தல் மூவ்… கிலியில் திமுக..!
11 September 2020, 5:26 pmதமிழக சட்டசபைக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி, சீட் பேரம் உள்ளிட்டவற்றில் அனைத்து அரசியல் கட்சிகளும் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றன. வேளாண் மண்டலம் அறிவிப்பு, அவிநாசி – அத்திக்கடவு குடிநீர் திட்டம், கூடுதல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தொடக்கம் உள்ளிட்ட மக்களிடம் வரவேற்பு பெற்ற திட்டப் பணிகளை முன்னிறுத்தி மக்களிடம் வாக்கு சேகரிக்க அ.தி.மு.க. களமிறங்க இருக்கிறது.
அதேவேளையில், அரசு செய்யத் தவறிய செயல்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
இப்படியிருக்கையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக, மறைமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, தமிழக அரசுப் பேருந்துகளில் “மக்களால் நான்.. மக்களுக்காக நான்,” என்னும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தாரக மந்திரம் பொரிக்கப்பட்டுள்ளது. அதோடு, புரட்சி தலைவி அம்மா எனவும் ஒட்டப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளின் ஓட்டுநரின் இருக்கைக்கு பின்னால், திருக்குறள் எழுதப்பட்டிருப்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்போது இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளில் ஜெயலலிதாவின் முழக்கம் எழுதப்பட்டிருப்பது அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, ‘செல்வி ஜெ. ஜெயலலிதா என்னும நான்’, என அவரது குரலில் கேட்கும் போது எவ்வளவு கம்பீரமோ, கர்வமோ எழுவதற்கு நிகரானது “மக்களால் நான்.. மக்களுக்காக நான்,” என்னும் வாசகம். பேருந்தில் பயணிப்பவர்களுக்கு நன்கு தெரியும்படி எழுதப்பட்டுள்ள இந்த வாசகம், கட்டாயம் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிமுகவினர் நம்புகின்றனர். எனவே, இந்த விவகாரத்தை விரைவில் திமுகவினர் பெரிது படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கின்றனர் தொண்டர்கள்.
0
0