ஜெயலலிதா சிலை பராமரிப்பு விவகாரம்… அதிமுகவின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு ஓபிஎஸ் நன்றி

Author: Babu Lakshmanan
22 October 2021, 6:58 pm
ops - jayalalitha statue- updatenews360
Quick Share

சென்னை : உயர்கல்வித்துறை வளாகத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை பராமரிக்க ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டின்‌ முன்னேற்றத்திற்காக, தமிழக மக்களின்‌ முன்னேற்றத்திற்காக தன்‌ வாழ்வையே அர்ப்பணித்த, தமிழ்நாட்டின்‌ தன்னிகரில்லாத்‌ தலைவராக விளங்கிய தமிழ்நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ மாண்புமிகு இதயதெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சிக்‌ காலத்தில்‌, சென்னை, காமராஜர்‌ சாலையில்‌ உள்ள மாநில உயர்‌ கல்வி மன்ற வளாகத்தில்‌ முழு திருவுருவச்‌ சிலை அமைக்கப்பட்டு, சிலையும்‌, அதனைச்‌ சுற்றியுள்ள இடமும்‌ நன்கு பராமரிக்கப்பட்டு வந்ததையும்‌, ஆட்சி மாற்றம்‌ ஏற்பட்டதையடுத்து மாண்புமிகு அம்மா அவர்களின்‌ சிலை பராமரிப்பின்றியும்‌, அதைச்‌ சுற்றியுள்ள இடம்‌ புதர்மண்டி பாழடைந்த நிலையில்‌ இருந்ததையும்‌ சுட்டிக்காட்டி மாண்புமிகு அம்மா அவர்களின்‌ திருவுருவச்‌ சிலைக்கு தினமும்‌ மாலை அணிவிப்பதற்கும்‌, சிலை மற்றும்‌ சிலை அமையப்‌ பெற்ற இடத்தை பராமரித்து பாதுகாப்பதற்கும்‌ அனுமதி வழங்கிடுமாறு எனது 16-10-2021 நாளிட்ட கடிதம்‌ வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களைக்‌ கேட்டுக்‌ கொண்டிருந்தேன்‌.

எனது கடிதத்திற்கு பதிலளிக்கும்‌ வகையில்‌, அரசின்‌ சார்பில்‌ சிலை மற்றும்‌ நினைவகங்கள்‌ அனைத்தும்‌ பொதுப்‌ பணித்‌ துறை மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகள்‌ மூலம்‌ உரிய முறையில்‌ பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது என்றும்‌, இந்நேர்வில்‌ தனி நபர்கள்‌ மற்றும்‌ அமைப்புகளிடம்‌ வழங்கிடும்‌ நடைமுறை இல்லாத நிலையில்‌ மாண்புமிகு அம்மா அவர்களின்‌ திருவுருவச்‌ சிலை அரசின்‌ சார்பில்‌ தொடர்ந்து நல்ல முறையில்‌ பராமரிக்கப்படும்‌ என்று மாண்புமிகு உயர்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ உறுதி அளித்திருக்கிறார்‌.

என்னுடைய கோரிக்கையை ஏற்று, சென்னை, காமராஜர்‌ சாலை, மாநில உயர்‌ கல்வி மன்ற வளாகத்தில்‌ அமைந்துள்ள மாண்புமிகு அம்மா அவர்களின்‌ முழு திருவுருவச்‌ சிலை நல்ல முறையில்‌ பராமரிக்கப்படும்‌ என்ற உத்தரவாதத்தை மாண்புமிகு உயர்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ மூலம்‌ தெரிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களுக்கு எனது
நன்றியினைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 511

0

0