தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் தொண்டர்களுக்கு இணையாக தலைவர்களைக் கொண்டுள்ள ஒரே கட்சி என்று காங்கிரசை கேலியாக சிலர் விமர்சிப்பது உண்டு. அதை உண்மை என நிரூபிக்கும் விதமாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கூடும்போதெல்லாம் அவ்வப்போது ஏதாவது ஒரு அசாதரண நிகழ்வு அரங்கேறியும் விடும்.
காங்கிரஸ் அலுவலகத்தில் களேபரம்
கடந்த 15-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சத்திய மூர்த்தி பவனில் நடந்தது.
அப்போது, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளில் பலர்
முறைகேடாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே மாவட்டத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தலை மீண்டும் நடத்தவேண்டும் என்று கோரி அந்த மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியின் காரை வழி மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கு எதிரான கோஷ்டியினரும் போராட்டத்தில் குதித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அழகிரி அங்கிருந்து அவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றினார்.
கேஎஸ் அழகிரி மீது புகார்
இந்த மோதலுக்கு நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபருமான ரூபி மனோகரன்தான் காரணம் என்று கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அவர் விளக்கம் அளிக்க கோரி நோட்டீசும் அனுப்பப்பட்டது.
இந்தத் தகவலை கேள்விப்பட்ட உடனேயே ரூபி மனோகரன் எனக்கும், இந்த சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் மீது கே எஸ் அழகிரி அபாண்டமாக பழி சுமத்துகிறார் என்று கொந்தளித்து போய் அறிக்கை வெளியிட்டார்.
வழக்கமாக காங்கிரஸில் எழும் இதுபோன்ற சண்டை, சச்சரவுகள் அடுத்த சில நாட்களில் தணிந்து போய்விடும். ஆனால் ரூபி மனோகரன் விவகாரமோ விஷ்வ ரூபம் எடுத்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
அழகிரி மீது அதிருப்தி
அப்போது வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு கே.எஸ்.அழகிரி காலையில் தனது ஆதரவாளர்களுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகே முன்னாள் மாநில தலைவர்கள் கே.வி. தங்கபாலு, எஸ். திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், எம். கிருஷ்ணசாமி ஆகியோர் மலர் மாலை அணிவித்து சென்றனர்.
இது அழகிரி மீது மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுவது போல அமைந்துவிட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கே எஸ் அழகிரி எரிச்சல் அடையும் அளவிற்கு இன்னொரு நிகழ்வும் அரங்கேறி இருக்கிறது.
பறிபோகிறதா பதவி?
இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தனி கச்சேரி நடத்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர்களான ஈ வி கே எஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் மற்றும் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் டெல்லிக்கு சென்று காங்கிரசின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை அவருடைய இல்லத்தில் சந்தித்தனர்.
அப்போது திருநெல்வேலி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் முறைகேடு நடந்ததுள்ளது. அதற்கு ஆதரவாக கே எஸ் அழகிரி செயல்பட்டு இருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் புகார் கூறியதாக தெரிகிறது.
இதனால் அழகிரியின் தலைவர் பதவி எந்த நேரத்திலும் பறி போகலாம் என்று தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களுடைய எண்ணம் நிறைவேறுமா? என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பாராட்டிய மூத்த தலைவர்கள்
“ஏனென்றால் கடந்த மாதம்தான் ஈ வி கே எஸ் இளங்கோவன், அழகிரியின் பிறந்தநாள் விழாவில் பேசும்போது, தமிழக காங்கிரஸ் தலைவராக, நியமிக்கப்பட்ட மூன்றரை ஆண்டுகளில் கட்சியில் எந்த கோஷ்டி பூசலும் இல்லாமல் அனைவரையும் அரவணைத்து செல்கிறார். இது பாராட்டத்தக்க விஷயம்” என்று பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒரு கூட்டத்தில் பேசிய செல்வப் பெருந்தகை எனக்கு தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி கிடைக்க காரணமானவரே அழகிரிதான். அவரால்தான் என்னால் இந்த உயர்ந்த இடத்திற்கு வர முடிந்தது என்று புகழாரம் சூட்டியிருந்தார்.
ஆனால் இப்போது திடீரென்று இருவருமே அழகிரியின் மீது கடும் விமர்சனத்தை வைக்கின்றனர்.
ஜால்ரா போடும் காங்., எம்எல்ஏ
முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் சட்டத்தில் டெல்லி மேலிடம் எடுத்த முடிவுக்கு மாறாக செல்வப் பெருந்தகை கருத்து தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்று அழகிரி அதிரடியாக பதிலடி கொடுத்தார். ஏனென்றால் 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வரவேற்று இருந்தார்.
2014-ல் இது தொடர்பான சட்ட மசோதாவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் கொண்டு வந்தது. அதைத்தான் மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது. அந்த சட்டம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஐந்து நீதிபதிகள் அமர்வு இறுதி தீர்ப்பளித்து இருக்கிறது என ஜெயராம் ரமேஷ் சொன்ன கருத்துக்கு முரண்படுவது போல் செல்வப் பெருந்தகை திமுக அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு கருத்து தெரிவித்தார். இது திமுக தலைமையுடன் அவர் மிகுந்த நெருக்கமாக இருக்கிறார்.
அதனால்தான் திமுக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் அவர் பதிவு செய்வதில்லை. மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் போலவே செல்வ பெருந்தகையும் திமுகவின் முழு நேர ஆதரவாளராக மாறிவிட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
ஈவிகேஎஸ் போடும் கணக்கு
ஈ வி கே எஸ் இளங்கோவனோ வயது மூப்பின் காரணமாக தனக்கு இனி கட்சியில் எந்த பதவியும் கிடைக்காது என்பதை நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளார். அதனால்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் பேசும்போது இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்ததன் பின்னணியும் ஆகும். அதேநேரம்
திமுக ஆதரவுடன் தனது மகனான திருமகன் ஈவேராவை எம்எல்ஏ ஆக்கியதே பெரும் பாக்யம் என்று அவர் நினைக்கிறார்.
மகன் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணமும் அவருடைய மனதில் உருவாகி இருக்கலாம். அதனால்தான், கே எஸ் அழகிரி மீது, காங்கிரஸ் தலைவரிடம் புகார் கூறியிருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.
மேலிடத்து ரெக்கமண்டேஷன்
ஆனால் இவர்களது புகார் மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடனடியாக எந்த முடிவையும் எடுத்து விட மாட்டார். ஏனென்றால் கே எஸ் அழகிரி மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சோனியா, ராகுல் இருவராலும் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்.
அதனால் அவர்களிடம் கருத்து கேட்காமல் இது தொடர்பாக அவர் முடிவெடுக்க வாய்ப்பில்லை. மேலும் திமுக கூட்டணியில் இருந்தால்தான் தமிழக காங்கிரசுக்கு தேர்தலில் நல்ல பலன் கிடைக்கும் என்று என்பதை கட்சி தலைமையிடம் தொடர்ந்து அழகிரி கூறி வருவதால் அவருடைய தலைவர் பதவியை டெல்லி மேலிடம் உடனடியாக
பறித்து விடாது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.