மாணவியின் உடலை பார்த்து கதறி அழும் கிராம மக்கள்… உடலை புதைக்க முடிவு… இறுதிச்சடங்கில் பங்கேற்க வெளியாட்களுக்கு தடை

Author: Babu Lakshmanan
23 July 2022, 9:02 am
Quick Share

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடல் சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அவரது உடலை பார்த்து கிராம மக்கள் கதறி அழும் காட்சிகள் பார்ப்போரை உலுக்கி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கணியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வந்தவர் ஸ்ரீமதி. இவர், கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சட்டப்போராட்டம் நடத்திய அவரது பெற்றோர், சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு உடலை பெற்றுக்கொள்வதாக நேற்று உறுதியளித்தனர்.

அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளுமாறும், நாளை மாலைக்குள் இறுதிச்சடங்குகளை முடிக்கும்படியும் நீதிபதி சதீஷ்குமார் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, இன்று காலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் மாணவியின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மகளின் உடலை கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர். முன்னதாக, மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.மூர்த்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ஷவரன் குமார் ஜடாவத், வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, இறுதிச் சடங்கிற்காக சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. முன்னும், பின்னும் காவல்துறை வாகனங்கள் பாதுகாப்போடு கொண்டு செல்லப்பட்ட மாணவியின் உடல், சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு சொந்த கிராம மக்கள் தாரை தாரையாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாணவியின் மரணத்தால் அந்த கிராமமே கண்ணீர் கடலில் தத்தளித்து வருகிறது.

பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவியின் உடல் தகனம் செய்வதாக இருந்தது. ஆனால், தற்போது புதைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனையில் முடிவில் சிக்கல் இருந்தால், மீண்டும் பரிசோதனை செய்யும் வகையில் புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, பெரிய நெசலூர் கிராமத்தில் அசம்பாவிதம் சம்பவங்கள் நிகழாமல் இருக்க 800க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவியின் இறுதிச்சடங்கில் உறவினர்கள், உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Views: - 404

0

0