கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவு: கமல்ஹாசன், ரஜினிகாந்த் இரங்கல்

28 August 2020, 10:22 pm
Quick Share

சென்னை: கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எம்.பி.க்கள் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இதன்காரணமாக சில எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வந்தார். கடந்த 10-ந்தேதி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு என கூறியுள்ளார்.

இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.

Views: - 24

0

0