மூன்றாவது அணி சர்ச்சை : மல்லுக்கட்டும் கமல்-தினகரன்

11 February 2021, 9:30 pm
Kamal - tttv dinakaran - updatenews60
Quick Share

ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்போது எழுகிற கேள்வி, வலுவான மூன்றாவது அணி அமையுமா? என்பதுதான். 3-வது அணிக்கும், வலுவான மூன்றாவது அணிக்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. வலுவான மூன்றாவது அணியின் இலக்கணம், ஒரு மாநிலத்தின் ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும் மாற்றாக ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய வாய்ப்புள்ள அணியாக அது இருக்கவேண்டும். அதுவும் அந்த அணி, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும், தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ போட்டியிடுவதும் இதில் முக்கியம்.

இதுபோன்ற சூழல் தமிழ்நாட்டில் ஒரு சில தேர்தல்களில் மட்டுமே இருந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

1989 சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தகைய போட்டியைக் காண முடிந்தது. இந்த தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வலுவாக இருந்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜீவ்காந்தி தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். குடிசை வீடுகளில் வசித்தோரை
அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து அதிரடி வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார்.

அந்தத் தேர்தலில் அதிமுக இரண்டாக பிளவுபட்டு எம்ஜிஆர் மனைவி ஜானகி அம்மாள் தலைமையில் ஒரு அணியாகவும், ஜெயலலிதாவின் தலைமையில் ஒரு அணியாகவும் போட்டியிட்டன.
இதனால் அந்தத் தேர்தலை நான்கு முனைப்போட்டி என்று கூட சொல்லலாம். ஆனால் தேர்தல் முடிவுகள் மூன்றாவது வலுவான அணியாக கருதப்பட்ட காங்கிரசுக்கு சாதகமாக அமையவில்லை. திமுக எளிதில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது.

இதன்பின் மூன்றாவது அணி 1996 தேர்தலின்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் உருவானது.
வைகோ திமுகவிலிருந்து நீக்கப்பட்டபின்பு 1994-ல் சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுமார் 7 லட்சம் பேருக்கும் மேல் திரண்டனர். அப்போது வைகோ நடத்திய இந்த கூட்டத்திற்கு இணையாக வேறு எந்த கட்சிக்கும் அங்கு கூட்டம் கூடியது இல்லை என்று கூறலாம். இன்னும் சொல்லப்போனால் அண்மையில் பெங்களூருவில் சிறைவாசம் முடிந்து சசிகலா சென்னைக்கு வந்தபோது அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு திரண்ட கூட்டத்தை விட, இது பல மடங்கு அதிகம்.

Vaiko 04 updatenews360

வைகோவுக்கு மெரினாவில் கூடிய கூட்டத்தை பார்த்து அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஒரு வலுவான சக்தி உருவாகிவிட்டது என்றே கருதப்பட்டது. அரசியல் வல்லுனர்களும் அப்படித்தான் கணித்தனர்.
1996 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் மதிமுக களம் இறங்கியது.

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்த நேரத்தில் நடிகர் ரஜினி திடீரென திமுக – ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாகவும், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் வாய்ஸ் கொடுத்தார். அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது என்று அவர் எழுப்பிய முழக்கம், அதிமுகவை மட்டும் அல்ல. வைகோவின் மதிமுகவையும் அந்த தேர்தலில் அடியோடு துவம்சம் செய்து விட்டது. அப்போது அதிமுக வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வென்றது. வைகோ அணியால் ஒரு இடத்தில் தான் வெற்றி பெற முடிந்தது. இந்தத் தேர்தலில் வைகோ அணி 8 சதவீத வாக்குகளை பெற்றது.

அன்று திமுக கூட்டணிக்காக ரஜினி வாய்ஸ் கொடுத்திருக்கவில்லை என்றால், மதிமுக குறைந்தபட்சம் 20 தொகுதிகளையாவது கைப்பற்றி தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்து இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் அப்போது கூறினர். இதன் பிறகு தமிழகத்தில் வலுவான மூன்றாவது அணி 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அமைந்தது. அப்போது நடிகர் விஜயகாந்தின் தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இதனால் அக்கட்சி எதிர்காலத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
விஜயகாந்துக்கு கருப்பு எம்ஜிஆர் என்ற பெயரும் தேர்தல் பிரச்சாரத்தின்போது சூட்டப் பட்டதால் இந்த எதிர்பார்ப்பு மேலும் எகிறியது.

அப்போது, திமுக தலைவர் கருணாநிதி வலுவான கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றி விட்டார். தேமுதிகவில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். அவருடைய கட்சிக்கு சுமார் ஒன்பது சதவீத வாக்குகள் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வலுவான மூன்றாவது அணி அமைந்தது. தேமுதிக தலைமையில் அமைந்த இந்த கூட்டணியில் மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தாமக என 6 கட்சிகள் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்தித்தன. இந்த மெகா கூட்டணி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.

இந்த எதிர்பார்ப்புக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. ஏனென்றால் டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து 234 தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்களை நிறுத்தினார். இதனால் அதிமுக, திமுகவுக்கு கிடைக்கக் கூடிய நடுநிலை ஓட்டுகளை எளிதில் பிரித்து மக்கள் நலக் கூட்டணி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த கூட்டணியாலும், பாமகவாலும் ஒரு இடத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் போனது பரிதாபமே.
இந்தத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

இப்படி தமிழ் நாட்டில் மூன்றாவது அணிபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்து, அது பல தேர்தல்களில் ஏமாற்றத்திலேயே முடிந்திருக்கிறது.

வரும் மே மாதம் நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாய் தெரிகிறது. நடிகர் கமல்ஹாசன் இப்படியொரு தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக வலுவான அணியை உருவாக்க முடியும் என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

Kamal Sellur Raju-Updatenews360

முந்தைய தேர்தல்களில் மூன்றாவது அணிகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. தமிழகத்தில் மிகப்பெரும் ஆளுமை சக்திகளாக திகழ்ந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் அப்போது உயிருடன் இருந்தனர், என்பதுதான், அது.

ஆனால் தற்போது தேர்தல் களம் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. ஜெயலலிதாவும், கருணாநிதியும் இன்று இல்லை. இந்த வாய்ப்பைத்தான் நடிகர் கமல் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். தான் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலம் அது சாத்தியப்படும் என்று உறுதியாக நம்புகிறார். அண்மையில் 5 கட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது அவருக்கு திரண்ட கூட்டம் மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. திமுக கூட்டணியில் தற்போது உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகியவை தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக அங்கு தொடர்ந்து நீடிக்குமா? என்பது சந்தேகம்தான்.

தாங்கள் கேட்கும் தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் இந்த கட்சிகள் கடைசி நேரத்தில் கமலின் மக்கள் நீதி மய்யத்துடன் கைகோர்த்து தேர்தலை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக காங்கிரசும், விசிகவும் தன் பக்கம் வரும் என்று கமல் உறுதியாக நம்புகிறார்.

இந்தக் கட்சிகள் வந்துவிட்டால் ஹைதராபாத் எம்பி ஒவைசியின் AIMIM கட்சியையும் தன் அணிக்குள் கமல் கொண்டு வந்துவிடுவார். அதற்காக அவர் தொடர்ந்து ஒவைசியுடன் பேசியும் வருகிறார்.
முஸ்லிம்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள ஒவைசி, தமிழகத்தில் வலுவாக காலூன்ற கமலுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இப்படி ஒரு கூட்டணி உருவாகும் பட்சத்தில் நிச்சயம் அது அதிமுக-திமுக அணிகளுக்கு பெரும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

dinakaran- updatenews360

இன்னொரு பக்கம் டிடிவி தினகரனும், மூன்றாவது அணி அமைக்க மல்லுக்கட்டி வருகிறார். அவருடைய சிந்தனையெல்லாம் அதிமுகவை சிதைக்கவேண்டும் என்பதாக இருப்பதால், குறைந்தபட்சம் 15 சதவீத ஓட்டுகளையாவது பெறவேண்டும் என்பது அவரின் இலக்காக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா சமீபகாலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். அதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்பது சந்தேகமே. தற்போது அவர் மெல்ல மெல்ல தினகரனின் அமமுக பக்கம் சாயத் தொடங்கி இருக்கிறார் என்பதும் தெளிவாக தெரிகிறது. தினகரன் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் எப்படியும் 60 தொகுதிகளுக்கு குறையாமல் கிடைக்கும், தேர்தல் செலவுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. 30 தொகுதி வரை எளிதில் வெற்றியும் பெற்று விடலாம் என்று பிரேமலதா கணக்குப் போடுவதாக தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தனது கூட்டணிக்கு தேமுதிக தவிர, நடிகர் கருணாஸ் கட்சி, திமுக அணியில் கேட்ட தொகுதிகள் கிடைக்காமல் வெளியேறும் என எதிர்பார்க்கப்படும் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளையும் இணைக்க தினகரன் முயற்சித்தும் வருகிறார். நடிகர் கமல் போலவே ஒவைசியின் கட்சிக்கு அவரும் வலை விரித்துள்ளார் என்ற பேச்சும் அடிபடுகிறது. தினகரன் விரும்புவதுபோல் வலுவான மூன்றாவது அணி அமைந்து விட்டால் தன்னால் தமிழகத்தில் ஒரு பெரும் பிரளயத்தையே ஏற்படுத்த முடியும், ஆட்சியையும் கைப்பற்ற இயலும் என்று டிடிவி தினகரன் கருதுவதாக அவருடைய தீவிர ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

Asaduddin Owaisi_UpdateNews360

இந்த மெகா கூட்டணி அமைந்த பின்பு மதுரையில் மிகப்பிரமாண்ட மாநாட்டுக்கு அவர் ஏற்பாடு செய்ய இருப்பதாகவும், அதில் சுமார் 20 லட்சம் பேரை திரட்டி தனது பலத்தை காண்பிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அமமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சசிகலா கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசனும், தனது கட்சி நான்காம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னையில் வருகிற 21-ந்தேதி பிரமாண்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள AIMIM கட்சி தலைவர் ஒவைசிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் சென்னையில் நடைபெற்ற திமுக சிறுபான்மையினர் பிரிவு மாநாட்டுக்கு தன்னை அழைத்து விட்டு, பின்னர் அழைக்கவே இல்லை என்று மறுத்ததால், திமுக மீது ஒவைசி கடும் கோபத்தில் இருக்கிறார். எனவே அவர் கமலின் மாநாட்டில் கலந்து கொள்வது நிச்சயம் என்கிறார்கள்.

தமிழகத்தில் வலுவான 3-வது அணி அமைக்கப் போவது நடிகர் கமல்ஹாசனா?… டிடிவி தினகரனா?… இந்த மல்லுக்கட்டில் முந்தப் போவது யார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 10

0

0