மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே : தமிழக பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் விமர்சனம்..!!
Author: Babu Lakshmanan13 August 2021, 6:30 pm
தமிழக அரசு தாக்கல் செய்த தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, கல்விக்கடன், கூட்டுறவு வங்கி நகைக்கடன் மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அறிவித்தது. இதையடுத்து, திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில், மேற்கண்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்து 100 நாட்களை கடந்து விட்ட நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. எனவே, இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அந்த அறிவிப்புகள் அறிவிப்பு இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி, மகளிருக்கான ஊக்கத்தொகை, மின்கட்டண முறையில் மாற்றம் மற்றும் சிலிண்டருக்கான அறிவிப்பை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடாமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழக அரசின் இந்த பட்ஜெட்டை அரசியல் தலைவர்கள் விமர்சித்தும், பாராட்டியும் வருகின்றனர்.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
0