‘தனி அணிதான்’ : திமுகவுக்கு திடீர் ‘ஷாக்’ கொடுத்த கமல்

13 January 2021, 5:02 pm
Kamal - cover - updatenews360
Quick Share

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த 5 வாரங்களாக ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்னும் முழக்கத்துடன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கிலோ மீட்டர்கள் பயணித்து தனது கட்சிக்கு ஆதரவு திரட்டியும் வருகிறார். கடந்த மாதம் 13-ம் தேதி அவர் மதுரையில் தனது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் எஃகு கோட்டை என்பதால் சென்டிமெண்ட்டாக மதுரையில் இருந்து கமல் பரப்புரையை ஆரம்பித்தார். முதல் நாளே களைகட்டியது.

அவருடைய பேச்சைக் கேட்பதற்காக ஆயிரக்கணக்கில் கட்சி தொண்டர்களும், மக்களும், திரண்டனர். இதனால் மிக உற்சாகமடைந்த கமல், தமிழகத்தில் எம்ஜிஆர் நடத்தியது போன்ற ஆட்சியை நானும் தருவேன் என்று மதுரையில் சூளுரைத்தார். பெரிய, பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களையெல்லாம் முந்திக்கொண்டு நடிகர் கமல் ஏன் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்? என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்தது.

ஆனால் அதற்கான பின்னணி காரணம் வேறு. தனது பலத்தை காண்பித்தால் மட்டுமே திமுகவுடன் பேரம் பேசி கேட்கும் தொகுதிகளை பெறமுடியும் என்பதே அப்போது அவருடைய முதல் நோக்கமாக இருந்தது. அதேநேரம், ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருடன் கூட்டணி சேர்ந்து கொள்ளலாம் என்றும் ஆசை. இதற்காகத்தான் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் முந்திக் கொண்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

அவர் திறந்த வேனில் தினமும் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணித்து மக்களையும், தனது கட்சி தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். அவருடைய சுற்றுப்பயணம் ஒரு மாதத்தை கடந்துவிட்டது.

சமீபத்தில் ஐந்தாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அவர் கொங்கு மண்டலத்தில் மேற்கொண்டார். அங்கும் அவருக்கு சென்ற இடங்களில் எல்லாம் வரவேற்பு பலமாக இருந்தது.
திறந்த வேனில் செல்வதால் வழி நெடுக அவரைக் காண பெருமளவில் மக்கள் கூடினார்கள். பொள்ளாச்சியில் கமல் பிரசாரத்துக்கு சென்றபோது பலத்த மழை கொட்டியது.
என்றபோதிலும், மழையை பொருட்படுத்தாமல் அவரைக் காண ஆயிரக்கணக்கில் தொண்டர்களும், மக்களும் திரண்டதால் ரொம்பவே மனம் குளிர்ந்து போனார்.

kamal haasan - updatenews360

பெரும் திரளான கூட்டத்தைப் பார்த்ததும் அவருக்கு வழக்கத்தை விட கூடுதலாக உற்சாகம் பீறிட்டது. அங்கு அதிரடியாக பேச ஆரம்பித்தார். கமல் பேச்சில் பல புதிய விஷயங்கள் அடங்கி இருந்தன. அதை மக்களிடம் வெளிப்படுத்தவும் அவர் தயங்கவில்லை.

“இது, நான் சினிமாக்காரன் என்பதற்காக கூடிய கூட்டமல்ல. என்னை சினிமா நடிகராகவும் பார்க்க வேண்டாம். மாற்றத்தை உருவாக்கும் சிறு விளக்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெண்கள், இளைஞர்கள் நினைத்தால் தமிழக அரசியலில் நிச்சயமாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்.
நான் உங்கள் முன் வைக்கும் ஒரே வேண்டுகோள்.
உங்கள் வீடுகளில் எரியும் சிறு விளக்காவே நான் இருக்க விரும்புகிறேன். ஊழல் காற்றில் இருந்து இந்த விளக்கை அணையாமல் பாதுகாக்க வேண்டிய கடமை மக்களாகிய உங்களுடையது. தமிழகத்தில் நேர்மையான ஒரு அரசு அமைந்திட எனக்கு வாய்ப்பு அளித்திடுங்கள். மாற்றத்தை நோக்கி மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் காத்திருக்கிறார்கள். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று ஆச்சர்யத்தில் அகம் மகிழ்ந்தார்.

Kamal - Updatenews360

மதுரைக்கு பிறகு கமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துவிட்டாலும் கூட தனது பிரச்சாரத்தில் அவ்வளவாக அவர் திருப்தி கொள்ளவில்லை என்கிறார்கள். ஆனால் கொங்கு மண்டலம், மதுரையைப் போலவே அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, எம்ஜிஆருக்கு செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்த மதுரை மண்டலமும், கொங்கு மண்டலமும் தனக்கும் அதேபோல் கை கொடுக்கும் என்று கமல் உறுதியாக நம்புகிறார். தனதுபரப்புரையின் போது மக்களிடம் அவர் பேசிய விஷயங்களை அரசியல் விமர்சகர்கள் மூன்று விதமாக பார்க்கின்றனர்.

சரி, அந்த 3 முக்கிய அம்சங்கள் எவை?…

இதுபற்றி அவர்கள் கூறுகையில் “நடிகர் கமலின் கொங்குமண்டல பிரச்சாரத்தின் மூலம் அவர் தனித்தே போட்டியிட முடிவு செய்திருக்கிறார் என்பது முதலில் திட்டவட்டமாக தெரிய வருகிறது.
தனது கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றிவிட்டு தன்னை திமுக இணைத்துக்கொள்ளும் என்று முதலில் அவர் நம்பியிருந்தார். இப்போது ராகுல் காந்தியின் தமிழக வருகையால் அதற்கு இடமில்லை என்பது கமலுக்கு புரிந்துவிட்டது. அப்படியே திமுக தனது கூட்டணியில் சேர்த்தாலும் கூட, கிடைக்கும் தொகுதிகள் மிகக்குறைவாகவே இருக்கும் என்றும் அவர் கருதுகிறார்.

kamal - stalin - updatenews360

ஏற்கனவே திமுக அணியில் ஒரு டஜன் கட்சிகளுக்கும் மேல் இருப்பதால், அங்கு சென்றால் எந்த அளவிற்கு மரியாதை கிடைக்கும் என்பதும் அவருக்கு சந்தேகமாக உள்ளது. அதனால் தனித்தே களம் கண்டு வெற்றியோ,தோல்வியோ ஒரு கை பார்த்து விடலாம் என்று கருதுகிறார். இரண்டாவதாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பெண்களும், இளைஞர்களும் முன்வர வேண்டும் என்று ரஜினி போலவே அவரும் வேண்டுகோள் விடுத்து இருப்பதால், மூன்றாவது அணி அமைப்பார் என்பதை திட்டவட்டமாகக் கூற முடிகிறது.

இது, கமல் திமுகவுக்கு கொடுத்திருக்கும் திடீர் ‘ஷாக்’ ஆகும். அவருடைய தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் அது நிச்சயமாக திமுகவின் ஓட்டுகளை கணிசமாக பிரிக்கும் என்று சொல்லலாம்.

மூன்றாவதாக, டார்ச் லைட் தேர்தல் சின்னம் கிடைக்குமா என்பதில் தற்போது அவருக்கு பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை, டார்ச்லைட் சின்னம் கிடைக்காமல் போனால் இரட்டை மெழுகுவர்த்தி, அரிக்கேன் விளக்கு, மின்கம்பம் என்று ஏதாவது ஒரு சின்னத்தை பெற விரும்புகிறார் என்பதும் தெரியவருகிறது.

அதாவது உங்களுக்கு நான் ஒரு சிறு விளக்காக இருப்பேன் என்கிறார் அவர். அப்படி சொல்வதன் மூலம் கமலால் டார்ச்லைட் சின்னத்தை பெற இயலாது என்பதை ஓரளவு யூகிக்க முடிகிறது.
ஒருவேளை, பழைய சின்னமே கிடைத்தாலும் கூட சிறு விளக்கு என்பதைத்தான் டார்ச் லைட் என்று சொன்னேன் என அவர் சமாளித்து விடவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் அவர் சிறு விளக்கு என்ற வார்த்தையை அனுபவம் மிக்க அரசியல்வாதிபோல் மிக கவனமாக கையாண்டு இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

kamal_seeman - updatenews360

சரி, கமல் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் அந்த அணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பிடிக்கும்? சீமானின் நாம் தமிழர் கட்சி, ஒவைசியின் AIMIM, அமமுக மற்றும் திமுகவால் ஓரங்கட்டப்படும் சிறு கட்சிகள் இணைவதற்கு வாய்ப்பு நிறையவே உண்டு.

இப்படி ஒரு அணி அமைந்தால் அது அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் பலத்த சவால் விடுவதாகவும் இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

அதேநேரம், நடிகர் ரஜினியின் ஆதரவைப் பெறுவதிலும் கமல் முன்பை விட தீவிரம் காட்டி வருகிறார். ரஜினி தனக்கு வெளிப்படையாக ‘வாய்ஸ்’ கொடுக்காவிட்டாலும் கூட, ஆரம்பத்தில் இருந்தே அவரிடம் ஆதரவு கேட்டு வருவதால் ரஜினி ரசிகர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று கமல் உறுதியாக நம்புகிறார். கமலின் பொள்ளாச்சி பேச்சு மூலம் தமிழக அரசியல் களம் இன்னொரு கோணத்தை நோக்கி நகர தொடங்கி இருப்பதை உணர முடிகிறது.

Views: - 7

0

0