தொழிலாளர்கள் இன்றி ஸ்தம்பிக்கும் கோவை நகரம் : சிறப்பு ரயில்களை இயக்க கமல்ஹாசன் கோரிக்கை..!!

15 January 2021, 2:55 pm
Kamal Sellur Raju-Updatenews360
Quick Share

கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு தேவையான வடமாநில பணியாளர்களை அழைத்து வர சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகளையாவது கைப்பற்றி விட வேண்டும் என்னும் முடிவுடன், தேர்தல் களப்பணியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற மாவட்டம் மற்றும் தொகுதிகளை குறி வைத்து, பல்வேறு திட்டங்கள் அடங்கிய வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார்.

அந்த வகையில், கோவையில் உள்ள தொழிலதிபர்களை கவரும் விதமாக, பல்வேறு பணிகளை அவர் செய்து வருகிறார். குறிப்பாக, கோவையில் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான 7 செயல் திட்டங்களை அண்மையில் அவர் வெளியிட்டார்.

இந்த நிலையில், மற்றொரு காயையும் அவர் நகர்த்தியுள்ளார். அதாவது, கோவையில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, டுவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில், “கொங்கு மண்டலத்தில் ஆர்டர்கள் இருந்தும் போதிய தொழிலாளர்கள் இல்லாமல் தொழில்துறையினர் தவித்து வருகின்றனர். லாக்டவுணில் வெளியேறிய வட மாநில தொழிலாளர்களை அழைத்து வர சிறப்பு ரயில்கள் தேவை எனும் நியாயமான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், தொழிலாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக மக்கள் நீதி மய்யத்தை மாற்ற கமல்ஹாசன் முயற்சி செய்து வருவது தெளிவாகியுள்ளது.

Views: - 0

0

0