2021 சட்டப்பேரவை தேர்தல் : கட்சி நிர்வாகிகளுடன் இன்று முதல் 3 நாட்கள் கமல் ஆலோசனை..!

2 November 2020, 11:38 am
kamal1- updatenews360
Quick Share

2021 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடனான 3 நாள் ஆலோசனைக் கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதல்முறையாக களம் காண உள்ளது.
அண்மையில் நடந்தக் கட்சி செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார். கூட்டணி குறித்து முடிவு எடுக்க கமல்ஹாசனுக்கு முழு அதிகாரம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதை விட கூட்டணி அமைத்தே போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்திற்கான மொத்த ஜிஎஸ்டி தொகையையும் வழங்கும் பட்சத்தில் பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் என்றும் அக்கட்சியின் கூறி வந்தனர். மற்றொரு புறம், காங்கிரஸுடன் கூட்டணி வைக்கவும் அந்தக் கட்சி தயாராக இருந்து வருகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் 3 நாள் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரிப்பது மற்றும் கூட்டணி குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

7 அமர்வுகளாகப் பிரித்து மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி, தொழிலாளர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். எந்தந்த தொகுதிகளில் கட்சி பலமாக உள்ளது, வேட்பாளராக யாரைநிறுத்தினால் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

Views: - 18

0

0

1 thought on “2021 சட்டப்பேரவை தேர்தல் : கட்சி நிர்வாகிகளுடன் இன்று முதல் 3 நாட்கள் கமல் ஆலோசனை..!

Comments are closed.