புழக்கத்தில் இல்லாத மனு ஸ்மிருதி நூலை பற்றிய விமர்சனம் தேவையற்றது : கமல்ஹாசன் கருத்து!!

5 November 2020, 2:24 pm
kamal chennai - - updatenews360
Quick Share

சென்னை : புழக்கத்தில் இல்லாத மனு ஸ்மிருதி நூலை பற்றிய விமர்சனம் தேவையற்றது என்றும், அரசியலமைப்பு சட்டம் பற்றி விமர்சனம் செய்தால் போராட்டம் வெடிக்கும் எனவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, அவர் பதிலளித்ததாவது :- அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் ரஜினிகாந்துடன் தொடர்ந்து பேசி வருகிறேன். அரசியல் கூட்டணி பற்றி தற்போது பேச இயலாது. ரஜினி உடல்நலம் தொடர்பான அறிக்கையில் இடம்பெற்றிருந்த தகவல்கள் எனக்கு முன்கூட்டியே தெரியும். 100 முதல் 160 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தாக்கத்தை ஏற்படுத்தும். சட்டப்பேரவை தேர்தலில் நல்லவர்களுடன் கூட்டணி அமைப்போம். பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் மக்கள் நீதிமய்யம் போன்ற நல்ல கட்சிகளும் இருக்கின்றன. மக்கள் நீதி மய்யம் அமைக்கும் கூட்டணி 3வது அணியாக இருக்காது, முதல் அணியாக இருக்கும். நேர்மை என்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் கொள்கை.
ரஜினியின் உடல்நிலையை பார்த்துக் கொள்வது அவசியம். நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் முதலமைச்சர் வேட்பாளர் என்பது எனக்கு ஒரு பெரிய பொறுப்பு. சட்டப்பேரவை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுகிறேன்.

புழக்கத்தில் இல்லாத மனு ஸ்மிருதி நூலை பற்றிய விமர்சனம் தேவையற்றது. அரசியலமைப்பு சட்டம் பற்றி விமர்சனம் செய்தால் போராட்டம் வெடிக்கும். காலத்திற்கு ஏற்றவாறு நாம் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால், நமது தரத்தில் மாற்றம் இருக்கக் கூடாது. சட்டம் ஒழுங்கை காக்கும் விதமாக பாஜகவின் வேல்யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேல் யாத்திரையை விட இளைஞர்களுக்கு வேலை தேவை தான் முக்கியம்.

வேலையின்மை, தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். பொங்கல், தேர்தலின் போது பணத்தை கொடுக்கும் அரசு, கொரோனா சமயத்தில் மக்களுக்கு பணம் கொடுக்கவில்லை. தமிழகத்தில் அனைத்து மக்களிடமும் ஆதரவு கேட்டு வரும் நிலையில், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திடம் ஆதரவு கேட்காமல் இருப்பேனா..? மக்கள் நீதி மய்யத்திடம் ஆட்சியைக் கொடுத்தால், சகாயம் போன்ற அதிகாரிகளுக்கு நேர்ந்த சோகம் நிகழாது.

எம்ஜிஆர் தனது திரைப்படங்களில் தனது கட்சியின் கொள்கைகளை பரப்பினார். அதுபோன்றுதான் நானும்.
வாய்ப்பு கிடைக்கும் போது கட்சியின் கொள்கைகள், சின்னத்தை மேடையில் பிரபலப்படுத்துவது வழக்கம். தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி விட்டது. எனது பயண விபரங்கள் நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும். நான் நாத்திகவாதி அல்ல. நான் பகுத்தறிவாதி. அதிகாரம் இல்லாத லோக்பால், லோக் ஆயுக்தாவை அமைப்பதில் எந்த பலனும் இல்லை. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நேரடியாக எதிர்க்கிறோம்.

தமிழகத்தை மாற்றுவதற்கான முயற்சியில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது. சாதி, பணத்தை அடிப்படையாக வைத்து வேட்பாளர்களை பிற கட்சியினர் தேர்வு செய்து வரும் நிலையில், அதற்கு நேர்மாறாகத்தான் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் தேர்வு இருக்கும், எனக் கூறினார்.

Views: - 28

0

0