இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000.. ம.நீ.ம. தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடித்ததா? கமல் குற்றச்சாட்டால் புதிய சர்ச்சை!!

8 March 2021, 8:30 pm
Kamal - stalin - cover - updatenews360
Quick Share

தேர்தலில் வெற்றியைக் கனியை பறிக்க ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு விதமான அணுகுமுறையை கையாளும். பிரதான கட்சிகள் மெகா கூட்டணி அமைக்கும். தேர்தல் அறிக்கையை வாக்காளர்களை ஈர்க்கும் விதமாகவும் வெளியிடுவார்கள். முக்கிய கட்சிகள் குறைந்தபட்சம் 10 வருடத்திற்கான தொலை நோக்கு செயல் திட்டங்களை வகுத்து வெளியிடுவதும் வழக்கம்.

இவை எல்லாமே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் கூட சொல்லலாம்.

DMK_Stalin_UpdateNews360

திருச்சியில் நடந்த திமுக ‘ஹைடெக்’ மாநில பொதுக்கூட்டத்தில்
அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், கட்சியின் லட்சிய பிரகடனத்தை வெளியிட்டார். அதில் 7 மிக முக்கிய உறுதிமொழிகள் இருந்தன. அதிலுள்ள இரண்டு பற்றிய பேச்சுதான் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

  • அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை. இதன் மூலம் தமிழக பொருளாதாரம் ரூ.38 லட்சம் கோடியை தாண்டும். தனிநபர் ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் 4 லட்ச ரூபாயாக இருக்கும். ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என அடுத்த 5 வருடங்களுக்கு உருவாக்குவோம்.
  • குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்பட்டோருக்கு கல்வி உதவித் தொகை இரு மடங்காக அதிகரிக்கப்படும்.

இந்த நிலையில்தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் திமுக மீது ஒரு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு நான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை திமுக அப்படியே காப்பியடித்து, தனது தொலைநோக்குத் திட்டத்தில் அறிவித்து உள்ளது என்று பகிரங்கமாகவே தெரிவித்து இருக்கிறார்.

குறிப்பாக, “நாமே தீர்வு என்று நாங்கள் சொன்னால் உடனே ஒன்றிணைவோம் வா என்று சத்தம் மாறாமல் சொல்கிறார். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற கருத்து கோட்பாட்டை முதல் கட்சியாக நாங்கள்தான் அறிவித்தோம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று இப்போது ஸ்டாலின் அறிவித்துள்ளார். 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்ற வாக்குறுதியை அப்படியே காப்பி எடுத்திருக்கிறார்கள். ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்று மாற்றி அறிவிக்கிறார்.
இந்த இரண்டும் ஒன்றுதானே.

kamal haasan - updatenews360

7 உறுதி மொழி உள்பட அத்தனையையும் காப்பி அடிக்கிறார். அப்படியாவது ‘பாஸ்’ பண்ண வேண்டிய கட்டாயமும், அவசியமும் அவருக்கு வந்துவிட்டது என்று கமல் கேலி கலந்து கடுமையாக இந்த குற்றச்சாட்டை கூறுகிறார்.

மேலும், அவர் தனது ட்விட்டர் பதிவில், “எங்கள் தேர்தல் அறிக்கையில் இருந்த அத்தனை சிறப்பம்சங்களையும் பிரதி எடுத்துக் கொண்ட கழகம் எங்களிடம் இருக்கும் நேர்மையையும், தூய்மையையும் கைக்கொண்டால் மகிழ்வேன்” என்றும் திமுகவை சீண்டி இருக்கிறார்.

சரி, அண்மையில் அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அப்படி என்ன கூறப்பட்டிருந்தது? சிலவற்றை தெரிந்து கொள்வோம்.

  • அரசு சேவையில் இருக்கும் ஒவ்வொரு சீருடைத் துறையிலும் பெண்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
  • ஒற்றை தாய்மார்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, பொருளாதார மேம்பாடு போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும். வேலையை நீங்கள் தேடாதீர்கள். வேலை உங்களைத் தேடி வரும்.
  • வேலையில்லா இளைஞர்களுக்கு தகுதி மற்றும் வாழும் சூழலின் தேவை அடிப்படையில் வேலையின்மை நிவாரணம் வழங்கப்படும்.

இதுபோன்ற மோதல் 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே ஏற்பட்டது. அப்போது, கமல் கிராமசபை கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலினும் கிராமசபை கூட்டங்களை நடத்தினார்.

Kamal Stalin updatenews360

இதைக்கூட எங்களைப் பார்த்துத்தான் திமுக காப்பி அடிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் அப்போது குற்றம் சாட்டியது. ஆனால் நாங்கள் 2005-ம் ஆண்டே இதுபோன்ற கிராமசபை கூட்டங்களை நடத்தி இருக்கிறோம் என்று திமுக பதில் சொன்னது.

2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தலின் போதும், இதுபோன்று தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை, பிரதான கட்சிகள் உருமாற்றி தங்களின் சிந்தனையில் உருவானதுபோல் வெளியிட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. ஆனால் அவையெல்லாம் இவ்வளவு பரபரப்பாக பேசப்படவில்லை.

இதில் பணம், வேலைவாய்ப்பு என்னும் வாக்காளர் ஈர்ப்பு உறுதி மொழிகள் அடங்கியிருப்பதால் பெரும் சர்ச்சை உருவாகி இருக்கிறது என்றே கூறவேண்டும். இனி இரு தரப்பிலும் தேர்தல் நடந்து முடியும் வரை இது தொடர்பாக வார்த்தை போருக்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது.

இதுபோன்ற புகார்கள், குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மையா? சரியானதுதானா? என்பதை பொதுமக்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஒவ்வொரு கட்சி வெளியிடும் தேர்தல் அறிக்கையையும் முழுமையாக படித்து ஒப்பிட்டு பார்க்கவும் அவர்களால் முடியாது.

இதற்கு ஒரே தீர்வு, தலைமை தேர்தல் கமிஷன் கையில்தான் இருக்கிறது.

தேர்தலை நடத்துவதற்கு முன்பு, அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்துப் பேசுவதுபோல், தொலைநோக்குத் திட்டங்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கைகள் வெளியீடு போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட நாளில் தேர்தல் கமிஷனிடம் அனைத்து கட்சிகளையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டு அவற்றை உடனடியாக ஒரே நேரத்தில் தேர்தல் கமிஷனே ஊடகங்கள் முன்பாக வெளியிடவேண்டும்.

அப்போதுதான் முதலில் நாங்கள் சொன்னோம், பிறகுதான் அவர்கள் அறிவித்தார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் ஒரு போதும் எழாது.

Views: - 2

0

0