உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!!

Author: Babu Lakshmanan
16 August 2022, 2:30 pm
Quick Share

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 1ம் தேதி சென்னை மதுரவாயலில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்த நிலையில், அவர் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார். கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு இந்து முன்னனி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூறியிருந்தது.

இந்தநிலையில், கனல் கண்ணணுக்கு ஆதரவாகவும், கைது நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக அரசுக்கு எதிராகவும் பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது : தில்லை நடராஜரை களங்கப்படுத்திய கயவனை சிவனடியார்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகும் கைது செய்யாமல் காப்பாற்றி வருகிறது இந்த திமுக அரசு. மறுபுறம், கனல் கண்ணன் அவர்கள் தெரிவித்த கருத்திற்கு உடனடியாக கைது செய்துள்ள இந்த திமுக அரசின் நடவடிக்கைகளின் மூலமாக கருத்து சுதந்திரத்திலும் இவர்களது இரட்டை நிலைப்பாட்டையும் மக்கள் விரோத போக்கையும் வெளிப்படுத்தி விட்டார்கள்.

சாமானிய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்துவரும் இந்த திமுக அரசு, கனல் கண்ணன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் கோரிக்கை, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 137

0

0