காஞ்சி,.யில் அதிமுக வேட்பாளர் திடீர் தற்கொலை : திமுகவினரின் மிரட்டல்தான் காரணம் எனக் குற்றச்சாட்டு.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு

Author: Babu Lakshmanan
10 February 2022, 2:21 pm
Quick Share

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் திமுக கட்சியின் மிரட்டலுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரிய கட்சியான அதிமுக ,திமுக ,பாஜக ,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதில் 36வது வார்டுக்கு உட்பட்ட வளத்தீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் (35 ) என்பவர் இன்று விடியற்காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜானகி ராமனின் தம்பி இதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்ததின்பேரில், விஷ்ணுகாஞ்சி காவல்துறையினர் ஜானகிராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தற்கொலை தொடர்பாக ஜானகிராமனின் தந்தை வேணுகோபால் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் என்னுடைய மகன் 36-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார் . இவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளது. அதிமுக கட்சியில் வட்ட செயலாளராகவும் பணியாற்றுகின்றார்.

இவரை எதிர்த்து  திமுக கட்சியை சேர்ந்த சுதா என்கின்ற கே.சுப்புராயன் போட்டியிடுகின்றார் . இவர் தொழில் துறை அமைச்சர் தாமோ.அன்பரசனின் மைத்துனர் என கூறப்படுகிறது. சுப்புராயனின் அண்ணன் சம்பத் என்பவர் முரசொலி நாளிதழில் மாவட்ட செய்தியாளராக நீண்டகாலமாக பணியாற்றி வருகின்றார். தா மோ அன்பரசனின் பி ஏ வாக முன்பு செயல்பட்டார். 

இந்த அளவுக்கு திமுக கட்சியில் பின்புலமுள்ள சுப்புராயன் மற்றும் திமுக கட்சியினர் சேர்ந்து அதிமுக வேட்பாளர் ஜானகிராமனை கடந்த ஐந்து நாட்களாக மிரட்டி வருகின்றனர் என்றும், இது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் அவர்களிடமும், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கேயு எஸ்.சோமசுந்தரம் அவர்களிடம் , மாவட்ட பொருளாளர் அப்பு என்ற வள்ளிநாயகம் அவர்களிடமும் மிரட்டல் தொடர்பாக பேசி, எனக்கு அச்சமாக உள்ளது என தெரிவித்துள்ளார் எனவும் தெரியவருகிறது.

வி.ஜானகிராமனின் தற்கொலைக்கு திமுகவினர் தான் காரணம் எனக்கூறி அதிமுக மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்ட கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவினர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் அவர்கள் வி.ஜானகிராமனின் இறப்புக்கு உண்டான காரணத்தை  விசாரணை செய்து கண்டுபிடிப்போம். முதலில் பிரேத பரிசோதனை நடைபெறட்டும். அதுவரையில் சாலை மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டதால் அதிமுகவினர் சாலை மறியலை கைவிட்டனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில்  பேசும்போது, திமுகவினர் தமிழகமெங்கும் அதிமுக வேட்பாளரை மிரட்டி வருகின்றனர். இதற்கு காவல்துறை துணை போகின்றது. கீழே உள்ள சக்கரம் மேலே வரும், திமுகவினரை காவல்துறை நம்பிட வேண்டாம், ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என பேசியது  குறிப்பிடத்தக்கது.

TN Election Commission - Updatenews360

இதனிடையே, அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, காஞ்சிபுரம் 36வது வார்டில் மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Views: - 587

0

0