24 மணிநேரம்கூட ஆகல… அதுக்குள்ளயா… பசுமை தீர்ப்பாய அறிவுறுத்தலை மீறிய திமுக கவுன்சிலரின் கணவர்… வைரலாகும் வீடியோவால் சர்ச்சை…!!

Author: Babu Lakshmanan
10 March 2022, 10:23 am
Quick Share

மரங்களை வெட்ட அனுமதிக்க கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஜோதிமணிகவுன்சிலர்கள் கூட்டத்தில் கூறிய 24 மணி நேரத்திற்குள்ளாகவே அடியோடு மரத்தை வெட்டி வீழ்த்திய திமுக கவுன்சிலரின் கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவில்கள் நிறைந்த மாவட்டம் எனப்படும் காஞ்சிபுரம் நகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சமூக அமைப்புகள் ஆங்காங்கே மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். வருவாய்த் துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற பல துறைகளின் அனுமதி கிடைத்தால் மட்டுமே தான் ஒரு மரத்தை வெட்ட முடியும். மேலும் அனுமதி பெறாமல் மரங்களை வெட்டுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே மாவட்ட வனத்துறை அலுவலர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 13 வார்டுக்குட்பட்ட பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெருவில் நியாய விலை கடை அருகே இருந்த சுமார் 15 ஆண்டுகள் பழமையான காட்டுவா என்ற மரத்தை திமுக கவுன்சிலர் சரஸ்வதி என்பவரின் கணவர் பாலா என்பவர் மாவட்ட நிர்வாகத்திடம் எந்த அனுமதியும் பெறாமல் மின்சார ரம்பம் வைத்து வெட்டி வீசினார்.

இதை அறிந்த சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் மேகநாதன் என்பவர் நேரில் சென்று கவுன்சிலரின் கணவரிடம் கேட்டபோது, நான் அனுமதி பெற்று தான் மரத்தை வெட்டுகிறேன், என உண்மைக்கு மாறாக பேசியுள்ளார். அதேபோல், சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் மாநில செயலாளர் விவேகானந்தன் கேட்டபோதும் உண்மைக்கு மாறாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக விவேகானந்தன் அவர்கள் கோட்டாட்சியர் ராஜலக்ஷ்மி இடம் கேட்டபோது, எந்த மரத்தையும் வெட்ட நாங்கள் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை என்றார். மேலும் இதை விசாரணை செய்ய சென்ற கிராம நிர்வாக அலுவலரையும் கோபமாக பேசி அனுப்பி உள்ளார். மரத்தை வெட்டிய குற்றத்துக்காக அவர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்ய கோரியுள்ளோம் என கோட்டாட்சியர் பேசிய ஆடியோ மற்றும் மரங்களை வெட்டும் போது எடுத்த வீடியோ ஆகியவை சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது. 

இந்த பிரச்சனை இந்தளவுக்கு பூதாகாரமாக வெடிப்பதற்கு  முக்கிய காரணம் என்னவென்றால்,  நேற்றுதான் காஞ்சிபுரம் மாநகராட்சியில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களின் முதல் கூட்டம்  நடந்தது. அதில் தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஜோதிமணி அவர்கள், சுற்றுச் சூழலை நாம் பாதுகாக்க வேண்டுமானால் மரங்களை வெட்ட விடாதீர்கள். ஒரு மரம் 150 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தால், 60 ஆயிரம் பேருக்கு ஆக்சிஜனை வழங்குகிறது. கொரோனோ தொற்று காலத்தில் பலரும் ஆக்சிஜன் இல்லாமல் அவதிப்பட்டனர் என்பதை உணர்ந்து மரங்களை வெட்டுவதை மாநகராட்சி கவுன்சிலர்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். 

நீதியரசர் பேசிய 24 மணிக்குள்ளாகவே திமுகவின் கவுன்சிலர் சரஸ்வதியின் கணவர் பாலா என்பவர், பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெருவிலுள்ள மரத்தை எந்த அனுமதியும் பெறாமல் வெட்டிய செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த கோபத்தை உண்டாக்கியுள்ளது.

அதேபோல் அனுமதி பெறாமல் மரத்தைப் வெட்டிய  குற்றத்திற்காகவும் , நீதியரசரின்‌ கோரிக்கையை புறக்கணித்த குற்றத்திற்காகவும் திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகின்றனர்.

Views: - 617

0

0