கன்னியாகுமரி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் : பா.ஜ.க. – காங்.,சில் போட்டியிட போட்டி போடும் பிரமுகர்கள் இவர்களா..?
5 September 2020, 12:23 pmமறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. வசந்த குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் நிமோனியா காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில், அவர் கடந்த 28ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து, அவரது உடல் தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்கு பிறகு, மறுநாள் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் மறைவை தொடர்ந்து அவரது தொகுதியான கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், யாரை நிறுத்துவது என்பது குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. கடந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. சார்பில் பொன். ராதாகிருஷ்ணனும், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்., சார்பில் வசந்த குமாரும் போட்டியிட்டனர். இதனால், எதிர்வரும் இடைத்தேர்தலிலும் மீண்டும் பா.ஜ.க., காங்கிரஸ் இடையேதான் மோதல் இருக்கும்.
மறைந்த எம்.பி. வசந்த குமாரின் மூத்த மகன் விஜய் வசந்த், அரசியலை பொறுத்தவரையில் கட்சி தலைமையின் கருத்துக்கிணங்க செயல்பட போவதாக தெரிவித்தார். ஒருவேளை வசந்த குமாரின் வாரிசை களமிறக்கி, அனுதாப ஓட்டுக்களை பெற்று மீண்டும் வெற்றி பெற காங்கிரஸ் முயற்சிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதேவேளையில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி விருப்பம் தெரிவித்துள்ளார். கட்சியின் முடிவுபடி செயல்பட தயார் எனவும் அவர் கூறியுள்ளார். விஜயதாரணியை எம்.பி. தேர்தலில் களமிறக்கி விட்டு, அடுத்த நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் முக்கிய நபர்களை களமிறக்கவும் காங்கிரஸ் திட்டமிடலாம்.
மறுபக்கம், பா.ஜ.க. தரப்பிலும் இடைத்தேர்தலில் களமிறங்க பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், நயினார் நாகேந்திரனுக்கும் இடையே போட்டி எழுந்துள்ளது. மேலிடம் வாய்ப்பு அளிக்கும்பட்சத்தில், இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என நயினார் நாகேந்திரன் வெளிப்படையாக தெரிவித்து விட்டார். கடந்த தேர்தலில் வசந்தகுமாரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த பொன்.ராதாகிருஷ்ணனும் மீண்டும் களமிறங்கும் முனைப்பில் உள்ளார்.
மொத்தம் 14.93 லட்சம் வாக்காளர்களை கொண்ட கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் களமிறங்குவது யார்..? வெற்றி பெறப் போவது யார்..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0
0