நாங்க தயார்… உங்களுக்கு தைரியம் இருக்கிறதா..? திமுக, காங்கிரஸுக்கு அண்ணாமலை பகிரங்க சவால்!!

Author: Babu Lakshmanan
18 January 2022, 12:49 pm
Quick Share

கரூர் : தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களை பாரதிய ஜனதா கட்சி எப்போதும் முன்னிலைப்படுத்தும் என்றும் கரூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா கரூர் திண்டுக்கல் சாலையில் இன்று மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கட்சி கொடியை ஏற்றி வைத்து கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க வந்த கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சியின் மூத்த முன்னோடியும், கரூர் மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட தலைவருமான தேவானந் அவர்களை கட்சி அலுவலகத்தை திறக்கச் செய்து முன்னிலை வகித்தார் அண்ணாமலை.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் அண்ணாமலை முன்பு தங்களை இணைத்துக் கொண்டவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் அண்ணாமலை.

நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தார் அண்ணாமலை. அப்போது, எல்லா மதத்தையும் சமமாக மதிக்கும் மாண்பு தமிழக அரசுக்கு இல்லை எனக் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் போராட்டம் நடத்தி தான் கோயில்களை திறக்க வைத்தோம். அண்மையில் சபரிமலைக்குச் சென்று வந்தேன். அங்கு கூட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோயில்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது.இதனைப் பார்த்தாவது தமிழகஅரசு கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

21- பொருட்கள் பொங்கல் பரிசாக வழங்கியதில் பல்வேறு குறைபாடுகளும், குளறுபடிகளும் உள்ளது. தமிழக மக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாநிலங்களில் பொருட்களை கொள்முதல் செய்து, கமிஷன் பெறுவதில் குறியாக இருந்துள்ளனர். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு குறை கூறி வரும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.தமிழக மக்கள் இப்போது அதை உணர தொடங்கியதில் எங்களுக்கு சந்தோஷம்தான் என்றார்.

மேலும், கொரோனோ காலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது. எந்த ஒரு கட்சிக்காவது தைரியமிருந்தால் ஆன்லைன் பிரச்சாரத்துக்கு வர தயாரா? என கேள்வி எழுப்பினார்.

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க இம்முறை அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பொய்யான தகவல்களை கூறி வரும் எதிர்க்கட்சிகள், தங்களது போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும் என்றார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்ற அவர், மகாகவி பாரதியார் அவர்களுக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாடுபட்டார். வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களை 75வது சுதந்திர தின விழா கொண்டாடும் வேளையில் இந்தியஅளவில் கௌரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்பட்டுள்ளது. நமது மண்ணுக்காக பாடுபட்டவர்களை பாரதிய ஜனதா கட்சி எப்போதும் உயர்வான இடத்தில் வைத்து அவர்களுக்கு உண்டான மரியாதையை செய்யும், என்றார்.

Views: - 351

1

0