எங்க போய் தொலையிறீங்க.. ? அதிகாரியை பொதுமக்கள் முன்னிலையில் திட்டி தீர்த்த கரூர் ஆட்சியர்…!!

Author: Babu Lakshmanan
4 July 2022, 6:18 pm
Quick Share

கரூர் : மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், அதிகாரியை மாவட்ட ஆட்சியர் திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோகைமலையை அடுத்துள்ள கழுகூர் அருகே உள்ள ஏ.உடையாபட்டி பகுதியில் வசித்து வருபவர் முத்துசாமி (41). மாற்றுத்திறனாளியான இவர் அப்பகுதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு மாகாளிப்பட்டி கிராமத்தில் 2.80 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அதில் 18 செண்ட் நிலம் குறைவாக இருப்பதால், அவற்றை அளந்து தனிப்பட்டாவாக வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 20ம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த ஜூலை 3ம் தேதி கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த நில அளவையர் சிவராதாவை சந்தித்து கேட்டுள்ளார்.

அப்போது நில அளவையருக்கும், முத்துச்சாமிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது. இதனால் நில அளவையர் கொடுத்த புகாரின் பெயரில் முத்துச்சாமி மீது தோகைமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த முத்துச்சாமி, தன்னுடைய உடலில் மண்ணென்னையை ஊற்றிக் கொண்டு கூட்ட அரங்கிற்குள் சென்றுள்ளார்.

இதனை பார்த்த காவல்துறையினர் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி எஸ்.கருப்பண்ண ராஜவேல் ஆகியோர் இணைந்து கூட்டுமுயற்சி எடுத்து சம்பந்தப்பட்டவரை வெளியே அழைத்து வந்து உடலில் தண்ணீரை ஊற்றி, உடையை மாற்றி ஆட்சியர் பிரபுசங்கரிடம் மனு அளிக்கச் செய்தனர்.

karur

மனுவினை வாங்கிக் கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட அதிகாரியை, அந்த கூட்டத்தில் அழைத்த போது, சில நிமிடங்கள் தாமதமான நிலையில், எங்க போய் தொலையீறிங்க, என்று கடுமையான வார்த்தைகளை கையாண்டும், உடனே அந்த அதிகாரியிடம் மனுக்களை கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிலையில், பல்வேறு மனுக்களை கொடுத்த என் மனு மீது இம்முறையும் எடுக்கவில்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்தார்.

Views: - 582

0

0