‘நல்ல வருமானம்’… குடியரசு தினத்தில் டாஸ்மாக் ஊழியருக்கு பாராட்டு சான்றிதழ் : அமைச்சரின் சொந்த ஊரில் அவலம்!!

Author: Babu Lakshmanan
27 January 2023, 1:07 pm
Quick Share

கரூர் : கரூரில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட நிர்வாகத்தின் செயல் கடும் சர்சைக்குள்ளாகியுள்ளது.

இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா நாட்களில் தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாநில வளர்ச்சிக்காக பல்வேறு அரசு துறையில் அயராது பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக பாராட்டு தெரிவிப்பது வழக்கமாக உள்ளது.

இந்திய நாட்டின் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பாக சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கேடயமும், பாராட்டு சான்றிதழும் நேற்று வழங்கப்பட்டது.

தமிழகத்தில் மது இல்லாத மாநிலமாக உருவாக்குவேன் என்று சொன்ன திமுக ஆட்சியில், மது விற்பனையில் வருவாய் ஈட்டியதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் பாராட்டு சான்றிதழ் வழங்கியதன் அவலநிலை குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் வடிவிலான பதிவுகள் வைரலாகி வருகிறது.

ஒருவேளை மதுவிலக்கு துறை அமைச்சர் சொந்த மாவட்டம் என்பதால், இதுபோல சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் என சமூக ஆர்வலர்கள் சிரித்த வண்ணம் கூறி வருகின்றனர். சமூக வலைதள பதிவுகளால் இந்த விவகாரம் சர்சையை கிளப்பி உள்ளது.

Views: - 559

0

0