பொறியாளர் to இயற்கை விவசாயி : என்ஜினியரிங் மூளையால் நெல் விளைச்சல் அமோகம்… விவசாயத்தில் அசத்தும் இளைஞர்…!!!!
Author: Babu Lakshmanan29 October 2021, 1:05 pm
ஐ.ஆர் 20, பொன்னி அரசி சாகுபடிக்கு ஈடாக கருப்புக்கவனி, கருத்தக்கார், குள்ளக்கார், மாப்பிள்ளை சாம்பா என்று பாரம்பரிய நெல் சாகுபடி செய்து அசத்தி வரும் பொறியாளர் பற்றிய விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
கரூர் அடுத்த செல்லாண்டிபாளையத்தை அடுத்து உள்ளது சுக்காலியூர். இந்த கிராமத்தில் வசிப்பவர் சிவக்குமார். பொறியாளரான இவர், இப்பகுதியின் அருகே இருந்து வரும் ஒரு தனியார் கலைக்கல்லூரியின் தாளாளராக இருந்து வந்தார். முதுகலை பட்டதாரியான எம்.இ கட்டுமானப் பொறியாளரான இவர், தற்போது முற்றிலும் முழு நேர இயற்கை விவசாயத்திற்கு மாறியதோடு, கால்நடைகளையும் வளர்த்து வருகின்றார்.
நாட்டு மாடுகள் மற்றும் ஆடு, கோழிகளை வளர்த்து வரும் இவரது விவசாய நிலம் ஆனது, அமராவதி ஆற்றின் தென்புறம் அமைந்துள்ளதால் தண்ணீர் பிரச்சினை இல்லை. இதுமட்டுமில்லாமல் முழுக்க, முழுக்க இயற்கை இடுபொருட்கள் மற்றும் இயற்கையான பூச்சி விரட்டிகள் என்று கடந்த 2 ஆண்டுகளாக, முழு நேர இயற்கை முறை விவசாய சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு அப்பகுதி விவசாயிகள் தயாராகி வரும் நிலையில், இவரும் இவரது நிலத்தை நெல் நடவு செய்ய தயார் செய்து வைத்தார். அருகில் உள்ள வயல்களில் விவசாய தொழிலாளர்களை கொண்டு, நடவு நடுதல், ஆள் பற்றாக்குறையை போக்க பலரும், நெல் நடவுக்கு இயந்திரத்தை பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஐ.ஆர். 20, ஆந்திரா பொன்னி போன்ற ரக நெல்லை பலரும் அரசு விதை நெல் விற்பனை நிலையத்தில் வாங்கி நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொறியாளரான சிவக்குமார். தனது விவசாய நிலத்தில் வழக்காமாக தாள் அடிக்க கொழுஞ்சி செடி வளர்த்து, அதை டிராக்டர் கொண்டு உழுது நிலத்தை தயார் செய்வது வழக்கம். ஆனால், இவர் தனது நிலத்தில் பல பயிர் நடவு செய்து, அதை டிராக்டர் மூலம் தாள் அடித்து நிலத்தை தயார் செய்து வைத்திருந்தார். தனக்கு இருக்கின்ற நிலத்தில், தமிழர்களின் பாரம்பரிய நெல் விதைகளான கருப்புக்கவனி, கருத்தக்கார், குள்ளக்கார், மாப்பிள்ளை சாம்பா போன்ற விதை நெல்களை வாங்கி நடவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
விதைப்பையும், இயந்திரங்கள், விவசாய தொழிலாளர்களை கொண்டு நடவு செய்யாமல், விலை மலிவான கை இயந்திரத்தை பயன்படுத்தி நடவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
வழக்கமாக நெல் விதைகளை வாங்கி நட்டு, அவை ஓரளவு வளர்ந்த பிறகு, அவற்றை பிடுங்கி இடைவெளி விட்டு நடுவது என்பது வழக்கமான ஒன்று. ஆனால், இவர் வைத்திருக்கும் கை இயந்திரம் மூலம் விதை நெல்களை போட்டு, அந்த கை இயந்திரத்தை இழுத்துச் செல்லும் போது சரியான இடைவெளியில் நெல்லானது சேற்றில் விழுகிறது. அவை ஒரு சில நாட்களில் தானாக வளர்ந்து விடும் என்கின்றனர்.
வழக்கமாக, ஒரு ஏக்கருக்கு 30 கிலோ வரை விதை நெல்லை வாங்கி, அவற்றை நாற்றாக்கி, எடுத்து நடவு செய்து, தொழிலாளர்களுக்கு செலவு என்பது 5 ரூபாய் வரை ஆகிறது. ஆனால், இந்த இயந்திரத்தை 6000 ரூபாய்க்கு ஒரு முறை வாங்கினாலே போதும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஏக்கருக்கு 10 கிலோ விதை நெல் இருந்தாலே போதும் என்கின்ற நிலை உள்ளது. இதனால் ஏக்கருக்கு 7000 ரூபாய் வரை பணம் மிச்சமாகிறது. விவசாய பணியாளர்கள் இல்லை என்கின்ற நிலை இருக்காது. ஒரு ஆள் இருந்தாலே 500 ரூபாய் கூலியில் நடவு பணிகளை முடித்து விடலாம் என்கின்றார் சிவக்குமார்.
இது போன்று நடவு செய்யப்படும் போது, 25 செண்டி மீட்டர் இடைவெளி கிடைக்கிறது. இதனால் சூரிய ஒளி நாற்றின் அடிப்பகுதி வரை கிடைப்பதால் நாற்றும் நன்றாக வளர்வதுடன், மகசூலும் அதிகளவில் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். இவரின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட சக விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் ஆர்வமுடன் பார்ப்பதுடன், கை இயந்திரத்தை இளைஞர்கள் முதல் பெண்கள் வரை சோதித்து பார்கின்றனர். சக விவசாயிகளும் இயற்கை முறை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர் என்றார்.
இவருக்கு உறுதுணையாக இவரது மனைவி ராஜேஸ்வரி, இவரும் பட்டதாரி ஆவார். இந்நிலையில், முழுக்க முழுக்க பொறியாளர் சிவக்குமாரின் விவசாயத்திற்கு இயற்கை இடுபொருட்களை தயாரித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூரில் இயற்கை விவசாயத்தில் பாரப்பரிய நெல்லை வைத்து, நேரடி நெல் விதைப்பு முறையை முன்னெடுக்கும் விவசாயி சிவக்குமார் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
0
0