இந்தியாவிலேயே முக்கால் பங்கு பாதிப்பு… விஸ்வரூபம் எடுத்த கொரோனா…! விழிபிதுங்கும் பினராயி விஜயன்! !!!

Author: Babu
30 July 2021, 7:47 pm
Kerala - updatenews360
Quick Share

திணறும் கேரளா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களில் படிப்படியாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து விட்டாலும் கூட கேரளாவில் அன்றாட பாதிப்பு என்பது 20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது.

அதுவும் கடந்த 28-ம் தேதி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட 43,240 பேரில் 22,056 பேர் கேரளவாசிகள். அதாவது 3.4 கோடி கேரள மக்கள் தொகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, நாட்டின் இதர பகுதிகளில் உள்ள 132 கோடி மக்கள் தொகையினரில் ஏற்பட்ட பாதிப்பை விட இது பலப் பல மடங்கு அதிகமாகும்.

Corona Cbe - Updatenews360

இது மிக மோசமானதொரு சாதனை. அதைவிட வேதனை தரும் விஷயம் என்னவென்றால், ஒரு வாரத்தின் 7 நாட்களிலும் சராசரியாக 18,000 பேர் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதுதான். அது மட்டும் அல்ல. தினமும் 125 முதல் 150 பேர் வரை பலியாகியும் வருகிறார்கள்.

சுகாதாரத்தில் முதலிடம்

கொரோனா முதலாம் அலையை சிறப்பாக கையாண்டதாக பாராட்டுப் பெற்ற கேரள அரசு கொரோனா 2-ம் அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவது வெளிப்படையாகவே தெரிகிறது.

இதற்கு முக்கிய காரணம் அங்கு 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அவர்கள் மூலம் 111 பேருக்கு நோய்த் தொற்று பரவுகிறது என்பதுதான்.

இத்தனைக்கும் கேரளாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் நாட்டிலேயே மிக அதிகம். 97 சதவீதம் பேர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். அதேபோல் சுகாதாரத்துறையில் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கும் மாநிலமும் கேரளாதான். நாட்டின் 27 சதவீத மருத்துவ கல்வி நிறுவனங்கள் அந்த மாநிலத்தில் உள்ளது. இதனால்தான் கேரள டாக்டர்கள், நர்சுகள் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவலாக காணப்படுகின்றனர்.

இது தவிர மாநிலம் முழுவதும் 7000 மருத்துவமனைகள் உள்ளன. இதில் 700க்கும் மேற்பட்டவை சிறப்பு மருத்துவமனைகள் ஆகும். அப்படி இருந்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் கேரள அரசு திணறிக் கொண்டிருக்கிறது.

அப்படியென்றால் மக்கள் முக கவசம் அணிவதை தவிர்க்கின்றனர் என்பதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை என்பதும் தெளிவாக தெரிகிறது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் அதை மற்றவர்களுக்கு கடத்தி விடுகின்றனர் என்ற உண்மையும் வெளிப்படுகிறது.

பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை சரிவர அமல்படுத்தவில்லை என்பதும் ஊர்ஜிதமாகிறது.

பக்ரீத் காரணம்

இதுபற்றி மத்திய இணை அமைச்சர் முரளிதரன் கூறும்போது, “பக்ரீத் பண்டிகையின்போது 3 நாட்கள் தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை கம்யூனிஸ்ட் அரசு தளர்த்தியது. அதன்பிறகுதான் கடந்த வாரம் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. முதலமைச்சர் பினராயி விஜயன், மக்கள் நலனுக்காக தளர்வுகளை அறிவிக்கவில்லை. அரசியல் லாபத்திற்காகவும் ஓட்டு வங்கிக்காகவும் தளர்வுகளை அறிவித்ததால்தான் மீண்டும் மாநிலத்தில் கொரோனா
பன்மடங்கு பெருகி விட்டது. பினராயி விஜயன் அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முற்றிலும் தோல்வி கண்டுவிட்டதையே இது காட்டுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

இத்தனைக்கும், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கேரளாவைச் சேர்ந்தவர்தான். சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்ட உகான் நகர மருத்துவ கல்லூரி ஒன்றில் டாக்டருக்கு படித்து வந்த மாணவி அவர்.

உகானிலிருந்து சொந்த ஊர் திரும்பியபோது கடந்தாண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி அந்த மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதேபோல பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், கோழிக் காய்ச்சல், எலிக்காய்ச்சல், நிபா காய்ச்சல், ஜிகா வைரஸ் என்று இந்தியாவில் எந்த தொற்று நோய் வந்தாலும், அது முதன் முதலில் கேரளாவில்தான் தலை காட்டுகிறது. அங்கிருந்துதான் மற்ற மாநிலங்களுக்கு வேகமாக பரவுகிறது.

சுகாதாரத்துறையில் நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கும் கேரளாவில் இதுபோன்ற நோய்கள் எப்படி ஊடுருவுகின்றன? என்பதும் ஆச்சரியமளிக்கிறது. இது இந்தியாவில், மருத்துவ ஆராய்ச்சிக்கு உட்படுத்தவேண்டிய மிகப்பெரிய விஷயம்.

சைலஜா பக்கம் திரும்பும் கேரளா

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் பினராயி விஜயன் அரசு விழி பிதுங்குவதால் கேரள அரசியல்வாதிகளின் பார்வை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர், சைலஜா டீச்சரை நோக்கி தற்போது திரும்பியுள்ளது.

மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சராக சைலஜாவை நியமிக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டனூர் தொகுதியில் 60 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் கேரள எம்எல்ஏ என்ற பெருமையைப் பெற்ற சைலஜா மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆவார் என்றே மக்கள் அனைவரும் கருதினர். ஆனால் அவருக்கு அப்பதவி வழங்கப்படவில்லை. மாறாக வீணா ஜார்ஜ் என்பவர் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதற்கு அப்போதே மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சைலஜாவை மீண்டும் சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கவேண்டும் என்று ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. ஆனால் மக்களின் செல்வாக்கு பெற்ற சைலஜாவை மீண்டும் அதே பதவியில் அமர்த்தினால் தன்னை அவர் ‘ஓவர்டேக்’ செய்து விடுவாரோ என்று பயந்து சட்டப்பேரவையில் கொறடா பதவியை அவருக்கு பினராயி விஜயன் கொடுத்ததாக கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு உள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜோ,”கொரோனா பரவல் விஷயத்தில்
வேண்டுமென்றே எங்கள் அரசு மீது வீண்பழி சுமத்துகிறார்கள்”என்று குமுறுகிறார்.

இதற்கிடையே, மாநிலத்தில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இருப்பதால், ஜூலை 31, ஆகஸ்ட் 1 ஆகிய இரு தினங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கேரளாவில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

“இதை 2 வாரங்களுக்கு முன்பே, நடைமுறைப்படுத்தி இருந்தால் நோய் பரவல் வேகத்தை கட்டுப்படுத்தி இருக்கலாம். மக்களின் உயிருடன் விளையாடி இருக்கத் தேவையும் இல்லை. ஆனால் பினராயி விஜயன் அரசு தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக செயல்படுகிறது” என்று கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

மூச்சுவிடாத தலைவர்கள்

இந்த நிலையில், கேரளாவுக்கு மத்திய அரசின் 6 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு பயணம் மேற்கொண்டுள்ளது. இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறும்போது, “தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் தலைமையிலான 6 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் தொடர்ந்து அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன நாட்டின் மொத்த கொரோனா பாதிப்புகளில் சராசரியாக 37 சதவீதம் அங்கு ஏற்பட்டு வருகிறது. அதனால், கொரோனா மேலாண்மைக்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு உதவிடும் வகையில் இந்த குழு செயல்படும்” என தெரிவித்ததார்.

Thirumavalavan- updatenews360

தமிழகத்தில், கேரள அரசை புகழ்ந்துபேசும் கமல்ஹாசன், திருமாவளவன் போன்ற தலைவர்கள் ஏராளமானோர் உண்டு. அவர்கள் எப்போது பார்த்தாலும் கேரள மாடல் வளர்ச்சியை பார்த்தீர்களா?… என்று கம்யூனிஸ்ட் அரசை தூக்கி வைத்தே பேசுவார்கள்! அவர்கள் இப்போது மூச்சு காட்டவே இல்லை.

எது, எப்படியோ! கேரள மக்கள் கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடவேண்டும் என்பதே நாட்டு மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பு!

Views: - 263

1

0